பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

233

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


 பாதுகாப்புத் தருகிற சர்க்காரையோ, பார்ப்பானையோ காட்டித் தரமாட்டார்கள். தேர்தலுக்கு நிற்கிற கட்சிகள் தொழிற் சங்கம் வைத்தால், அவர்கள் ஆளுக்குத்தானே ஓட்டுப்போட வேண்டும்? இருக்கிற இந்தியக் கட்சிகளின் ஐக்கமாண்ட் இங்கே இருப்பதில்லை. அதனால், நமது சங்கம் ஒன்றுதாள் திராவிடத் தேசியச் சங்கமாகும். இதுதான் தொழிலாளத் தன்மையையே ஒழிப்பது ஆகும். மேலும், மேல்நாட்டார் போல விஞ்ஞான முறைகளையும் நாம் கையாண்டு வேளாண்மையைப் பெருக்க வேண்டும். என் காலத்திலேயே பூமியைப் பகிர்ந்தளிக்கும் முறை வந்து விடும் என்று நம்புகிறேன். நிலத்துச் சொந்தக்காரன் - நிலத்துக் கூலிக்காரன் என்ற சொல்லே அகராதியில் இல்லாதபடி நாம் செய்வோம் என்று விளக்கிப் பெரியார் விவசாயத் தொழிலாளர் பிரச்னைகளை அணுகினார்.

தென்பகுதி ரயில்வேமென் யூனியன் என்ற அமைப்பினைத் தொடங்கும் போதும், பெரியார், திராவிட மக்களே தொழிலாளிகள் தாம்; என்றே தமது கருத்துரையைத் தொடங்கினார். தொழிலாளிகள் ஸ்ட்ரைக் செய்வதால் ஒரு நன்மையும் இல்லை. அவ்வப்போது சிறு சலுகைகளைச் செய்து கொடுத்துவிட்டு, உரிமைக்குரலை எழுப்பாத வாறு கவனத்தைத் திருப்பி விடுவார்கள். வேலையில் தகுதி திறமை பார்த்தாலும், சம்பளத்தில் வேறுபாடு இல்லாமல் சரிசமன் செய்கிறார்களா? பொறுப்பும், பொதுத் தன்மையும் கெட்டுப்போய் நிர்வாகமும் தொழிலாளியும் ஒருவரையொருவர் ஏமாற்றி வருகிறார்கள். சாதாரணமாக, ஒரு ரயிலைக் கவிழ்ப்பதாக வைத்துக் கொண்டால், இதனால் யாருக்கு நட்டம்? பார்ப்பனுக்கா? வடநாட்டு நிர்வாகத்துக்கா? ஆகவே, இந்த நாட்டுக்குத் தகுந்த முறையில் தொழிலாளர் பிரச்சினையை அணுக வேண்டும். இங்குள்ள விசித்திரமான நிலைமை, இந்தப் பாழாய்ப்போன நாட்டில் தவிர உலகத்தில் வேறெங்கும் கிடையாது. சூத்திர சாதி, பார்ப்பானுக்கே உழைத்துப் போடவும்; அவர்கள் எல்லாவற்றையும் தங்கள் வயிற்றுக்கே வாய்க்கால் வெட்டிவிட்டு, உயர் வாழ்வு வாழவும் ஆன அமைப்பு முறை இங்கு - மட்டுமே உள்ளது. எல்லார்க்கும் எல்லாம் பொது என்று இங்கே பிரித்துக் கொடுத்தாலும், பார்ப்பான் திதி, திவசம் பேராலும், கடவுள் பேராலும் ஆண்டு முழுவதும் நம்மிடம் கறந்து கொண்டுதான் இருப்பான். ஆகையால் முதலாளித்தன்மையுடன் சேர்த்துப் பார்ப்பன உயர்வுத் தன்மை, கடவுள் மத சாஸ்திரக் கட்டமைப்பு யாவற்றையும் ஒழித்தால்தான் எல்லார்க்கும் எல்லாம் என்ற நிலை ஏற்பட முடியும் - என்றார் பெரியார்,

பெரியாரிடம், கலப்பு மணத்தால் சாதி ஒழியுமா? என்று கேட்டபோது; வசதி உள்ளவர்கள் கலப்புமணம் செய்து கொண்டால் சமூகம் ஒன்றும் சொல்லாது. அவர்களும் தமது பிள்ளைகளுக்குக்