பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

234


கல்யாணம் செய்யும்போது, கலப்பு மணச் சாதியில்தான் பார்க்க வேண்டும்; மற்றவர்கள் முன்வர மாட்டார்கள். சாதி ஒழிப்புக்கு அரசாங்கமும் சட்டம் செய்வதோடு, உதவவும் வேண்டும். மத சாஸ்திரங்களை அப்படியே வைத்துக்கொண்டு, சாதியை ஒழிப்பது இயலாது என்று கருத்தறிவித்தார் பெரியார்; 1952 பிப்ரவரி 22-ஆம் நாள் “விடுதலை”யில் இக்கருத்தை வெளியிட்டுள்ளார். .

1952 ஜூன் மாதம் சேலத்தில் நடைபெற்ற சென்னை ராஜ்யத் திராவிடர் கழகப் பொது மாநாட்டில், பெரியார், தாம் தலைமை ஏற்க விரும்பவில்லை; வேறு யாரையாவது கேட்டுக் கொள்ள முயன்றும் நிறைவேறவில்லை ; அதாவது, தகுந்தவர்களாக யாரும் ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் வரவேற்புக் குழுவின் தலைவராகிய பெண்ணாகரம் எம்.என். நஞ்சையா, செயலாளராகிய சேலம் கே. ராஜாராம் பி.ஏ. ஆகியோர் விரும்பியவாறு தாமே தலைமை ஏற்க நேரிட்டதாகவும், அதனாலேயே தாம் புதிய திட்டங்களோ கிளர்ச்சிகளோ அறிவிக்க இயலவில்லை என்றும் பெரியார் வருந்தினார். தகுதியான நண்பர்கள் கிடைக்காதது குறித்தும், மிகுந்த ஆதங்கம் தெரிவித்தார். திராவிடர் கழகத்தின் முக்கிய கொள்கைகள் மூன்று:- முதலாவது வருணாசிரம மூடநம்பிக்கை ஒழிப்பு; இது கடவுள், மதம், பார்ப்பானுக்கு விரோதம் இரண்டாவது, திராவிட நாடு பிரிவினை; இது சர்க்காருக்கு விரோதம்/ மூன்றாவது வகுப்புவாரி உரிமை; இதையும் நம்மவர்கள், தம்வரையில் அனுபவிக்க முன் வருவார்களே தவிர, இதற்காகப் போராடப் பயப்படுவார்கள்! கழகத்தாரல்லாத வெளியார் கிடைக்காமல் நான் ஏமாற்ற மடைந்தேன் -என்கிறார் பெரியார்.

சேலம் நீதிக்கட்சிப் பிரமுகர் பி.கஸ்தூரிபிள்ளை பெரியாரின் உற்ற நண்பர். கூட்டுறவுத் துறையிலும் மோட்டார் போக்குவரத்திலும் ஈடுபாடு மிக்கவர். கஸ்தூரிபிள்ளையின் இளவல் அப்பாவுபிள்ளை மோட்டார் அதிபர். அதற்கடுத்த இளவல் பொன்னுசாமி பெரியாரின் அன்புத் தோழர், கஸ்தூரிபிள்ளையின் இரண்டாவது மகன் கே. ராஜாராம் சிறுவயது முதல் பெரியாரின் தொண்டராகத் தயாரானவர், பி.ஏ. முடித்ததும் நேரே கழகப் பணிக்குத் தன்னை ஒப்படைத்துக் கொண்டு, பெரியாருடைய அந்தரங்கச் செயலாளராக விளங்கினார். 1962-1967 இரண்டு பொதுத் தேர்தல்களிலும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு வென்றார். 1971-ல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுக் கலைஞர் அமைச்சரவைச் சகாவாக விளங்கினார். 1977 தேர்தலில் தி.மு.க. சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றார். பின், மக்கள் தி.மு.க., அமைத்தவர்களில் ஒருவரானார். இப்போது,