பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

244




30.6.53 காலை 9 மணியளவில் 73 வயதடைந்த முன்னாள் அமைச்சரும் வகுப்புரிமைக் காவலருமான எஸ்.முத்தையா முதலியார் தஞ்சை மாவட்டத்தில் தனது கிராமத்தில் மரணமடைந்த செய்தி பெரியாரைப் பேரதிர்ச்சிக்கு ஆளாக்கிற்று இழப்பை வெகுவாக உணர்ந்து வருந்தினார் பெரியார்.

14.7.53 அன்று ஆச்சாரியாரின் அடக்குமுறை வெறியாட்டம் தலைவிரித்து ஆடியது. முதல் நாள் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களில் முக்கிய ஐவராகிய அண்ணா , நெடுஞ்செழியன், சம்பத், மதியழகன், நடராசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுச் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 14-ம் நாள் சென்னையில் குருசாமி தலைமையில் 80 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். பலர் அடித்து நொறுக்கப்பட்டனர். 16-ம் நாள் கணக்கின்படித் தமிழகமெங்கும் பெரியாரின் தொண்டர்கள் கைது செய்யப்பட்டவர்கள் 1700 பேர்; மருத்துவமனையில் 50 பேர்; அடக்கு முறை துப்பாக்கிக் குண்டு தடியடிக்குப் பலி 10 பேர்; கை கால் உறுப்பு இழந்தோர் 10 பேர். 20.7.53 மறியலில் திராவிடர் கழகத் தொண்டர்கள் 2450 பேர் கைதாயினர். ஆங்காங்கு நடைபெற்ற (தூத்துக்குடி கல்லக்குடி) துப்பாக்கிப் பிரயோகங்களைக் கண்டிக்க 24.7.53 அன்று நாடெங்கும் கடையடைப்பும் வேலை நிறுத்தமும் கடைப்பிடிக்க வேண்டினார் பெரியார், சென்னையில் ஊர்வலமும் பொதுக் கூட்டமும் பெரியார் கலந்து கொள்ள, பிரம்மாண்டமாக நடைபெற்றன. முதல்வர் வீட்டு முன் மறியல் தொடர்ந்தது. அண்ணா குழுவினர் ஐவரும் ஜாமீனில் 24-ம் நாள் வெளிவந்தனர். அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது. 500ரூ. அபராதம் கட்டமறுத்து ஐவரும் 3 மாதச் சிறைதண்டனை ஏற்றனர். 1.9.1953-ல் கலைஞர் ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை பெற்றுத் திருச்சி சிறைக்கு ஏகினார்.

ஆகஸ்டு 1-ஆம் நாள் ரயில் நிலைய இந்தி அழிப்புப் போர். தொண்டர்களைப் பெரியார் எச்சரித்தார். சென்ற ஆண்டு போலவே செய்ய வேண்டும். அனைவரும் கருஞ்சட்டை அணியவேண்டும். இந்தி ஒழிக தமிழ் வாழ்க என்று மட்டுமே முழக்கமிட வேண்டும். ஜாமீனில் யாரும் வெளிவரக்கூடாது என்றும் தாம் சேலத்தில் இந்தி அழிப்பதாகவும் பெரியார் அறிவித்தார். அத்துடன், தொண்டர்களைச் சந்திக்கத் தாம் ரயில் மார்க்கமாக 28, 29 நாட்களில் சுற்றுப் பயணம் வருவதாகவும், ஆங்காங்கு தோழர்கள் வந்து ரயில் நிலையத்தில் தம்மைச் சந்திக்க வேண்டுமென்றும் பெரியார் கூறியிருந்தார். ஆகஸ்டு 1 போராட்டம் அமைதியாகவும் வெற்றியுடனும் நடைபெற்றதெனினும், ஜூலை 14, 20 ஆகிய இருநாட்களிலும் திராவிடர்கழகம் தொண்டர்கள் 5,000 பேர் கைது செய்யப்பட்டதாகவும், 3,000 பேர் விடப்பட்டதாகவும், 1,500 பேர் தண்டிக்கப்பட்டதாகவும், 500பேர்