பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

245

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


 இன்னும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் 12.8.53 “விடுதலை” கூறியது. பெரியார் ஈரலில் (லிவரில்) ஏதோ கெடுதல் என்று மருத்துவர்கள் கூற்றின்படி ஓய்வு எடுத்து 5,6 நாள் சிகிச்சை பெற நேர்ந்தது. எனினும், ஆகஸ்டு 15 துக்கநாள் அனுசரிக்கும் வழக்கம் அந்த ஆண்டும் கைவிடப்படவில்லை.

திருச்சி வீரபத்திர செட்டியார் என்ற பெயர் 1953-ம் ஆண்டு பத்திரிகைகளில் மிகவும் பிரபலம். பெரியார், பிள்ளையாரை உடைத்ததற்காக அவர்மீது 195, 195A, பிரிவுகளின் கீழ், இவர் திருச்சி மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் 13.8.53-ல் வழக்குப் போட்டார். அது செஷன்ஸ் வரை சென்று 13.1.54-ல் தள்ளுபடி செய்யப்பட்டது, அத்துடன் சென்னை உயர்நீதி மன்றத்துக்கும் சென்று 13.10.54-ல் தள்ளுபடி செய்யப்பட்டது. (இம்மூன்று நீதிமன்றங்களிலும் தேதி13.)

சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படிப் பதிவு செய்து கொள்ளப்படவேண்டும்; இல்லாவிட்டால் செல்லாது என்று 1953 ஆகஸ்ட் 31-ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. பெரியார் அந்தத் துறையிலும் தொடர்ந்து போராட வேண்டியதாயிற்று. இந்திய வரலாற்றில் 1953 செப்டம்பர் 3-ஆம் நாள் ஒரு சிறப்புமிக்க மறப்பதற்கரிய திருநாள்! என்ன? டெல்லி மாநிலங்கள் அவையில், டாக்டர் அம்பேத்கார், தனது இனத்தாரிடம், உயர்சாதி இந்துக்கள் தொடர்ந்து இப்படியே நடந்துவந்தால், தானே அரசியல் சட்டத்தைக் கொளுத்தப்போவதாக அறிவித்தார்! இதற்கு ஏழெட்டுத் திங்களுக்கு முன்னரே பெரியார் இவ்வாறு கூறிவிட்டார். 17.9.53 அன்று பெரியாரின் 75-வது பிறந்த நாளைச் சிறப்புடன் கொண்டாடுமாறு, திராவிடர்கழகத்தின் நிர்வாகத் தலைவர் தி.பொ. வேதாசலம் வேண்டுகோள் விடுத்தார். மாயூரத்தில் 6.9.53 அன்று திராவிட எதிர்ப்பு மாநாடு நடத்திய சிலம்புச்செல்வர் ம.பொ. சிவஞானத்தை, யாரோ தாக்கிவிட்டார்களாம்.

சென்னையில் தமிழ்ப்பெரியார் திரு.வி. கல்யாண சுந்தரனார், திருவுருவப் படத்தினை 13.9.53 அன்று பெரியார் திறந்து வைத்துப் பலபடப் புகழ்ந்தார். 17-ந் தேதி ஈரோடு சென்றிருந்த போது, தமது 70-வது வயதில் அத்தமிழ்ப் பெரியார் மறைவுச் சேதி கேட்டுக், கதறித் துடித்துப் பதறிய பெரியார், உடனே புறப்பட்டு, மணியம்மையார். ஈ.வெ.கி. செல்வனுடன் சென்னை வந்தடைந்தார். 18-ந் தேதி “விடுதலை”யில் தமிழ்ப் பெரியார் மறைந்தார் என்று தலையங்கம் எழுதினார். நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அந்தோணிப்பிள்ளை போன்ற ஏராளமான தொழிற்சங்கத் தலைவர்களுடன் பெரியாரும் இடுகாட்டுக்கு நடந்து சென்றார். மதுரையில் 20.9.53 அன்று நடைபெற்ற பெரியார் பிறந்தநாள் விழாவில் நாவலர் சோமசுந்தர பாரதியார், கி.வீரமணி ஆகியோர் பங்கேற்றனர். பொன்மலையில்