பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

246


மிகச் சிறப்புடன் தென்பகுதி ரயில்வேக் தொழிலாளரின் முதலாம் ஆண்டு மாநாடுகள் 26, 27 தேதிகளில் நடைபெற்றபோது, பெரியார் மிகுந்த பெருமிதத்துடன் கலந்துகொண்டார்.

திருச்சியில் அக்டோபர் 2-ம் நாள் நடந்த தொழிலாளர் கூட்டத்தில் பேசும் போது பிள்ளையார் உடைப்புக்குப் பிறகு இப்போது கிருஷ்ண விக்கிரமும் உடைக்கப் போவதாகக் கூறிக் கிருஷ்ணனின் யோக்கியதை என்ன என்றும் பெரியார் விளக்கமுரைத்தார். பிள்ளையாரை உடைத்தபோது, பெரியாருக்கு மறுப்பாக, அப்போது எடுக்கப்பட்ட ஜெமினி அவ்வையார் திரைப்பட விளம்பரத்தில், நிறைய விநாயகர் உருவத்தை அச்சடித்து நாடெங்கும் ஒட்டினர். முதல்வரான ஆச்சாரியார் வேண்டுமென்றே இரண்டு முறை அந்தத் திரைப்படத்தைப் பார்க்கச் சென்றார். பெரியார் கிருஷ்ணன் பொம்மையையும் உடைப்பதாகச் சொன்னவுடன் திராவிட இயக்கங்களை “எறும்பும் மூட்டைப் பூச்சியும் போல் நசுக்கி விடுவேன்” என்பதாக ஆச்சாரியார் சூளுரைத்தார். (1967-ல் இவர் நிலை என்ன?) திராவிட ஆடுகள் மோதிக் கொள்ளும்போது சிந்தும் இரத்தத்தை ஆரிய நரியாகிய ஆச்சாரியார் வர்க்கம் நக்கிக் குடிப்பதாக “விடுதலை” கார்ட்டூன் வெளியிட்டது. உருவ வழிபாடு ஒழிப்புக் கழகம் என ஒன்றைத் திருச்சி மையத்தில் அமைத்துப் பேராசிரியர் சி. இலக்குவனார் அதன் பொறுப்பாளராக இருந்து, அதே பிரச்சாரத்தை நடத்திவருமாறு பெரியார் ஓர் ஏற்பாடு செய்தார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் அக்டோபர் 10,11 தேதிகளில் நடைபெற்ற சுயமரியாதை, திராவிடர் கழக மாநாடுகள் சரித்திரப் புகழ் பெற்றுவிட்டன. இங்கு தான் பெரியார், “திராவிடத் தோழர்கள் கத்தி வைத்துக் கொள்ள வேண்டும் தாக்குவதற்காக அல்ல; தற்காப்புக்காக” “பார்ப்பானே வெளியேறு; திராவிடனே தயாராயிரு” என்பது சுருக்கமான, சுருக்கென்று தைக்கும், உருக்கமான முழக்கம்! திராவிடர் கழகம், வியாதி வந்தபின் குணப்படுத்தும் வைத்திய இலாக்கா அல்ல, வியாதி தோன்றுவதற்கான மூலகாரணங்களைக் கண்டு பிடித்து, ஒழித்து, வியாதி பரவாமல் முன்கூட்டியே எச்சரிக்கையாகத் தடுக்கும் சுகாதார இலாக்காவாகும். என்று எல்லாருக்கும் புரிய வைத்தார் பெரியார்.

ஓமந்தூர் ராமசாமியார்கூட, ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டம் தீங்கானது எனச் சுட்டிக் காட்டினார். ஆனால் நம்மவராகிய பி.டி. இராசன் “பார்ப்பனர் மேல் துவேஷமோ குரோதமோ எதற்கு?” என்பதாக உபதேசம் செய்தார். அதேபோல, ஆச்சாரியாரின் சீடராக நிதி மந்திரி சி. சுப்பிரமணியம், திராவிடர் கழகப் போக்கு சரியில்லை என, விஷயங்களைத் திரித்துக் கூறி, விஷமப் பிரசாரம் செய்தார். “விடுதலை” ஏடு இவற்றையெல்லாம் தக்க முறையில் எடுத்துக்-