பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

251

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


 வேண்டியுள்ளது. அதாவது, “இன்றைய தினம் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் கடவுள் மத சாஸ்திர புராண இதிகாச ஒழிப்பே புத்தர் சொன்னவை ஆகும். எனவே நாம் புத்தர் மாநாடு நடத்துகிறோம்”– என்று பெரியார் விளக்கம் உரைத்தார். தொடர்ந்து பற்பல ஊர்களிலும் புத்தர் கொள்கை விளக்கச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். பிப்ரவரி முதல் வாரத்தில் பெரியார் சில நாள் உடல் நலமின்றி ஓய்வில் இருந்தார்.

சென்னையில் ஒரு விழா நடத்திக் கோவை விஞ்ஞானி ஜி.டி.. நாயுடு தாம் கண்டுபிடித்த அருமையான அறிவியல் கருவிகளைத் தொழில் ரீதியாகப் பெருமளவில் தயாரிக்க மத்திய அரசு தடையாயிருப்பதால், அவற்றை வரிசையாக வைத்துச், சம்மட்டியால் தூள் தூளாக உடைத்து நொறுக்கினார். கடிகாரம், ரேடியோ போன்ற அரிய பொருள்கள் வீணாயின. பல அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டார்கள். நாயுடு தமது எதிர்ப்பைக் காட்டும் முகத்தான் இப்படிச் செய்ததுதான் சரி என்று அண்ணா உள்படப் பலர் கருத்துரைத்தபோது, பெரியார் மாத்திரம் மாறுபட்டு, நாயுடு செய்தது முட்டாள்தனம் என்று உரைத்தார். இது நடந்தது 30.1.1954 அன்று. ஆனால், அடுத்த திங்கள் சட்டமன்ற மேலவைக்கு நடந்த ஒரு தேர்தலில் (எம்.எல்.சி) ஜி.டி. நாயுடு போட்டியிட்ட போது, அவருக்கே அனைவரும் ஆதரவு நல்கிட வேண்டுமெனப் பெரியார் விரும்பி வேண்டிக் கேட்டுக் கொண்டார்.

மார்ச் மாதத் துவக்கத்திலும் பெரியாருக்கு உடல் நலங் குன்றியதேனும், சுற்றுப் பயணத்தை நிறுத்தாமல் தொடர்ந்தார். ஒத்துக் கொண்ட நிகழ்ச்சிகளுக்குத் தமக்கே உரிய தனித்த சிறப்பியல்பினுக்கேற்பத், தவறாமல், சங்கடத்துக்கிடையிலும் சென்றார். ஆச்சாரியார் கல்வித் திட்ட எதிர்ப்பு இன்னும் மங்காமல் மறையாமல் தீயாய்க் கனன்று கொண்டிருந்தது. ஆரிய ஆதிக்கத்தை ஒழிக்கும் எந்தப் போராட்டத்துக்கும் நான் தயார் என்று, தங்கள் ரத்தத்தால் கையெழுத்திட்டு, நூற்றுக்கணக்கான தோழர்கள் தந்தை பெரியாருக்குக் கடிதங்கள் அனுப்பிய வண்ணமிருந்தனர். மார்ச் 27, 28 தேதிகளில் நாகையில் நடைபெற்ற இயக்க மாநாடுகளில், தீர்மானம் ஒன்று நிறைவேற்றி; ஆச்சாரியார் கல்வித் திட்ட எதிர்ப்புப் படை ஒன்று நீடாமங்கலம் அ.ஆறுமுகம் அவர்கள் தலைமையில் தஞ்சை மாவட்டத்திலிருந்து மறுநாளே புறப்படுவதென்றும், வழிநெடுகப் பிரச்சாரம் செய்து கொண்டே சென்னை சென்றடைவதென்றும் திட்டமிடப்பட்டது.

மார்ச் மாதம் 30-ஆம் நாள் சக்கரவர்த்தி ராசகோபாலாச்சாரியார் சென்னை மாகாண அரசியலிலிருந்து வீழ்த்தப்பட்டார். அன்றோடு அவர் வகித்த அரசுப் பதவி ஆட்டங்கண்டது. புதிய சட்டமன்றக்-