பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

252


 கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்க நடந்த கூட்டத்தில், காமராசருக்கு 93 வாக்குகள். உடல் நலமில்லை என்ற போலிக்காரணங்காட்டி, எதிர்ப்பினைத் தாங்க இயலாமல் ஒதுங்கிய ஆச்சாரியாரின் சீடரான சி. சுப்பிரமணியம் பெற்ற வாக்குகள் 41. “பார்ப்பனர் தோற்றனர். திராவிடர் வென்றனர். திராவிடர் பெற்ற வெற்றி நிலையாக இருக்க ஆவன செய்ய வேண்டும்” என்றார் பெரியார். காமராசர் பெரியாரின் ஆதரவு கோரினார். கல்விச் சாலைகளிலும், அரசு அலுவல்களிலும் வகுப்பு வாரி உரிமையை அமுலாக்கம் செய்வதாக விருப்பம் தெரிவித்தார். எனவே, இனி ஆச்சாரியாரோ, அவர் தொண்டரடிப் பொடிகளோ முதலமைச்சராகாதவாறும் பார்த்துக் கொள்வதாகவும் காமராசர் கூறினார். இந்தச் சூழ்நிலையில் காமராசரை விட்டால் நல்ல தமிழர் ஒருவர் முதல்வராக வருவது சாத்தியமில்லாது போய்விடுமே என்று பெரியார் கவலைப்பட்டார். அதன் விளைவு 1954 ஏப்ரல் 13-ஆம் நாள் திருச்சி மாவட்டம் பெரம்பலூரில் வே. ஆனைமுத்து தலைமையில் நடைபெற்ற குலக் கல்வித் திட்ட எதிர்ப்பு மாநாட்டில், முதன் முதலாகப் பெரியார், காமராசருக்குத் தம் ஆதரவை வெளிப்படையாகப் பிரகடனம் செய்தார். முப்பதாண்டுகளாகத் தாம் மேற்கொண்டிருந்த காங்கிரஸ் எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஒருசிறிய மாறுதலைச் செய்து கொண்டார். காங்கிரஸ் ஆதரவு என்பதாகவே துவங்கியது. அதுகூடத் தமது வகுப்புரிமைக் கோரிக்கைக்குக் காமராசர் இணக்கம் தெரிவித்த அடிப்படையில்தான்!

தஞ்சை மாவட்டத்தில் நீதிக்கட்சியின் உறுதியான தலைவரும், பெரியாரிடம், பேரன்பு பூண்டவரும், இரா. சொக்கப்பாலின் (அத்தையன்பர்) மாமனுமாகிய நெடும்பலம் என்.ஆர். சாமியப்பா மறைவு பெரியாருக்கு ஒரு பேரிழப்பாகும். (இரா. சொக்கப்பா, பேங்க் ஆஃப் தஞ்சாவூர், செயலாளர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார ஸ்தாபன டிரஸ்டில் உறுப்பினராயிருந்தார். நெருக்கடி நிலையின் போது ராஜிநாமாச் செய்து விட்டார்.)

திருச்சி வே.ஆனைமுத்து பி.ஏ., கொள்கைப்பற்றும், நல்ல விஷய ஞானமும் உள்ள தொண்டர். பெரியார் இவர்மீது நம்பிக்கை கொண்டிருந்தார். இயக்கத்திற்கு இவர் ஆற்றிய மற்ற பணிகளைவிடச் சிறந்தது பெரியார் சிந்தனைகள் என்ற நூல் தொகுப்பே ஆகும். திருச்சி சிந்தனையாளர் கழகம் அமைத்து, அதன் சார்பில் இதனை வெளியிட்டார். இவருக்கு உறுதுணையாயிருந்தவர் நோபிள் பிரஸ் உரிமையாளரும், “பஞ்சாயத்துச் செய்தி” ஆசிரியருமான கோவிந்த ராஜுலு - இருவரும் பாராட்டிற்குரியோரே.

குடந்தை ஏ.எம். ஜோசப் திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம் தொடங்கப்பட்ட காலமுதல் அரும்பணியாற்றி வருபவர். தஞ்சை மாவட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் முழு ஆதிக்கத்திலிருந்து