பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

254




இதைப் பார்த்த ஜீவானந்தமும் ராமமூர்த்தியும், ஆள்வது ராஜாஜியா ராமசாமிப் பெரியாரா என்றனர். சட்டசபைக்கோ பதவிக்கோ செல்லாத நாம், யார் நல்லது செய்தாலும் பாராட்டுவது போல் இதையெல்லாம் பாராட்டினோம்!. கல்வித்திட்ட எதிர்ப்பின் வலிமை புரியாமல், எடுத்துச் சொன்னவர்களெல்லாருமே இராமசாமி நாயக்கரின் ஆள் என்று கருதி, ஆணவமாக இருந்ததால், ஆச்சாரியார், இன்று நானே வருந்தும்படியாக வெளியேறிவிட்டார்.

தமிழர் முதல்மந்திரியாக வந்திருப்பதால் மட்டுமல்ல; கல்வித் திட்டத்தை உடனே எடுத்ததால்தான் காமராசர் மந்திரி சபையை நான் பாராட்டுகிறேன் - என்பதாகப் பேசினார் பெரியார். அதே போல, 22, 23 தேதிகளில் சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழக, திராவிட விவசாயத் தொழிலாளர் சங்க மாநாடுகளிலும், புதிய மந்திரி சபையை வரவேற்றார். நீண்ட நாட்களுக்குப் பின், பார்ப்பனரல்லாத ஆந்திரால்லாத தெலுங்கரல்லாத ஒரு தமிழர் முதன் மந்திரியாக வந்து, அதுவரை (பின்னர் ஆர். வெங்கட்ராமன் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.) ஒரு பார்ப்பன மந்திரிகூட இல்லாமல் அமைச்சரவை அமைந்துள்ளதைச் சுட்டிக் காட்டினார் பெரியார். இந்த மாநாடுகளில் எஸ். குருசாமி, வி.வீராசாமி எம்.பி., என். ஜீவரத்தினம் ஆகியோரும் பங்கேற்றனர். கி. வீரமணி புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்தார். திருச்சியில் பிரச்சாரப் பயிற்சிப் பள்ளியை ஆனைமலை நரசிம்மனும், சேலம் ராசாராமும் 10 நாள் வரையில் நடத்தி வந்தனர். திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு 30.5.54 அன்று திருச்சியில் கூடிப், பல முக்கிய தீர்மானங்களை இயற்றியது. அதில் 16-ஆவது தீர்மானம், ஒருவர் அதிகபட்சமாக 10 ஏக்கர் நிலந்தான் வைத்திருக்கலாம் என்று காமராசர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்ததாகும்.

தபால் கார்டுகள் எழுதும்போது “பார்ப்பனத் துவேஷி” என்று முதலில் குறிப்பிட்டுவிட்டுப் பிறகு எழுதத் துவங்குங்கள், என்று, 1.6.54 அன்று பெரியார் சிதம்பரத்தில் பேசும்போது, தோழர்களைக் கேட்டுக் கொண்டார்.

சர். சி.பி. ராமசாமி அய்யர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிவிட்டு விலகுவது கேள்வியுற்றுப் பெரியார் மகிழ்ந்தார். கோயில் அர்ச்சனைகள் வடமொழியில் இல்லாமல் தமிழிலேயே நடைபெற வேண்டுமென்று குன்றக்குடி அடிகளார் கோரி வந்ததை; வடமொழி விரட்டல் பாராட்டுக்குரியது என “விடுதலை” ஏடு 28, 6.54-ல் தலையங்கம் தீட்டியது.

1.7.54 அன்று வழக்கம் போலவே திராவிட நாடு பிரிவினை நாள் கொண்டாடுமாறு பெரியாரின் வேண்டுகோள் வெளிவந்தது. அடுத்து 1.8.54 அன்று முந்தைய இரண்டு ஆண்டுகளிலும் செய்ததுபோல் ரயில் நிலையப் பெயர்ப் பலகைகளில் உள்ள இந்தி