பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

255

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


 எழுத்துகளை அழிக்க வேண்டும். ஆனால், குடியாத்தம் தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் காமராசர் போட்டியிட்டுத் தாம் முதல்வரானதை உறுதி செய்து கொள்ள வேண்டிய அவசியம் நேர்ந்தது. இந்த இடைத் தேர்தலில் காமராசரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பெரியார் விரும்பினார். அதனால், தாம் நடத்தும் ஆகஸ்டு 1-ந் தேதி போராட்டம் அவருக்கு ஏதாவது பாதகமான சூழ்நிலையைத் தோற்றுவித்துவிடுமோ என அஞ்சி, அதை 8-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார் பெரியார். இதற்காக 4,5 தேதிகளில் ரயில் மார்க்கமாகப் பல ஊர்களுக்கும் சுற்றுப் பயணம் சென்று, தோழர்களை ஆங்காங்கே சந்தித்து, ஊக்கமளித்தார். “தோழனே! தமிழ்நாட்டில் 500க்கு மேல் ரயில் நிலையங்கள் உள்ளன. நீ எந்த ஊரில் இந்தியை அழிக்கப் போகிறாய்? இந்தி படிக்காதவனுக்கு உத்தியோகமில்லை; நாடாளுமன்றமில்லை; நாட்டிலும் இடமில்லை என்கிறான். நாம் ஏற்கனவே இரண்டாண்டுகளாக இந்தி எழுத்துக்களை அழிக்கிறோம். “அழித்தால் என்ன? நடவடிக்கை எடுத்தால் அதிகம் செலவாகும். ஆனால் 2,200 ரூபாய் செலவில் நாங்கள் உடனே எழுதி விடுகிறோம்!” என்கிறார் நமது துணை ரயில்வே மந்திரி அளகேசன்! எனவே இந்தத் தடவையும் நாம் அழித்ததை அவர்கள் எழுதினால், இனி வேறுமுறைகளைப் கையாள்வோம் என எச்சரிக்கை தருவோம்” என்று பெரியார் பேசி வந்தார்.

“ஆந்திர மாகாணம் தனியே பிரிந்து சென்று விட்டது. கேரள மாநிலம் அமையவில்லை . மலையாளம், தென் கன்னடம் ஆகிய இரு ஜில்லாக்கள் தான் எஞ்சியிருக்கின்றன. அவையும் நீங்கினால் தனித் தமிழ்நாடுதான். அப்படியிருக்க, இன்னும் ஆந்திரர் மலையாளிகள் தொல்லையும், பார்ப்பனர் தொல்லையும் தமிழ்நாட்டில் நீடிப்பதா? மொத்த மக்கள் தொகையில் தமிழ்நாட்டில் பார்ப்பனர் 2¾ சதவீதம், கிறிஸ்தவர் 100க்கு 4 பேர், முஸ்லீம்கள் 100க்குச் சுமார் 5 பேர், மலையாளிகள் 100க்குச் சுமார் 8 பேர் கன்னடத்தார் 100க்குச் சுமார் 5 பேர். ஆகவே நூற்றுக்கு 25 பேராக உள்ள இந்தத் தமிழரல்லாத கூட்டத்தார், தமிழ்நாட்டில் சாதாரண உத்தியோகங்களில் 100க்கு 75 பேராகவும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இதில் குறிப்பாக, மலையாளிகள் தொல்லையே பெருந்தொல்லை! வகுப்புவாரி உரிமையில் இவர்களும் பார்ப்பனரல்லாதார் என்ற பாதுகாப்பில் நுழைந்து விடுகிறார்கள்! ஆனால் இவர்கள் ஆரியக் கலாச்சாரம், ஆரிய மொழி, நடையுடை பாவனை, ஆரிய வருணாசிரம் ஏற்பாடு இவற்றையே முழுமையும் கையாளக் கூடியவர்கள், அதனால், பார்ப்பனர்களும் தாங்களில்லாத இடங்களுக்கு இவர்களிருப்பதையே ஆதரிக்கிறார்கள். சென்னை அரசாங்கத்தின் முக்கிய பதவிகளை எடுத்துக் கொள்ளுங்கள்:- தலைமைச் செயலாளர், தலைமை