பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

256


 எஞ்சினியர், தலைமை மருத்துவர்கள், பிரின்சிபால்கள், போலீஸ் டிப்டி கமிஷனர்கள், மாவட்டப் போலீஸ் அதிகாரிகள் இப்படி முக்கிய பதவிகளில் மலையாளிகளே வீற்றிருக்கிறார்கள். இவை ஆச்சாரியாரின் காலத்தில் ஏற்பட்டிருக்கின்றன. இப்படியே நீடித்தால் தமிழன் வாழ்வது எப்போது?

சமீப காலத்தில் திருவாங்கூர்-கொச்சி சமஸ்தானப் பகுதிகளில் தமிழர்கள் கொடுமையாக நடத்தப்பட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் தமிழர்கள் நல்லவண்ணம் யோசித்துக் கட்டுப்பாடான கிளர்ச்சி செய்வதன் மூலம் பரிகாரம் பெற வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். இதுவே எனது 76-ஆவது பிறந்த நாள் செய்தி” என்று பெரியார், 17.9.54 “விடுதலை” ஏட்டில் அறிக்கை வெளியிட்டுத் தமிழ் மக்களின் உறங்கும் இன உணர்வினைத் தட்டி எழுப்பிவிட்டார்!

தமது பிறந்த நாள் விழாக் கூட்டங்களிலும் ஏனைய பொதுக் கூட்டங்களிலும் பெரியார் இராமாயண, ஆபாசப் புரட்டுகளை விளக்கினார். குறிப்பாகச் சென்னையில் நாள் தவறாமல் ஒவ்வொரு வட்டத்திலும் இராமாயண விளக்கச் சொற்பொழிவுகள் நடந்து வந்தன. வால்மீகி இராமாயணத்தை ஓரெழுத்து விடாமல் படித்து, ஆய்வு செய்து, பாத்திரங்களின் தன்மைகளை முற்றிலும் உற்றுணர்ந்து, தெளிவாகப் புரிந்து வைத்திருந்த பெரியார், அந்த இதிகாசம் விளைத்த நாசத்தை எடுத்து அணுஅணுவாய்ப் பிளந்து காட்டிய வேகத்தை, “இந்து” பத்திரிகையே வயிற்றெரிச்சலோடு கூக்குரலிட்டு எழுத நேரிட்டது. பதவி நீங்கிய ஆச்சாரியாரும், பெரியாரின் எதிர்ப்பு அணியில் நின்று, பக்திப் பிரச்சாரங்களைச் சபாக்களில் நடத்திடத் துவங்கினார்.

ஆயிரம் விளக்குப் பகுதியில் போலீஸ் அதிகாரியின் வீடு இருந்ததால், அங்கு பெரியாரின் இராமாயணப் பிரச்சாரக் கூட்டத்துக்கு ஒலி பெருக்கி அனுமதி தரவில்லை! 14.11.54 அன்று, விடாமல் கூட்டத்தை ஏற்பாடு செய்யச் சொல்லிப், பெரியார், தமது தொண்டையும் வயிறும் வலிக்க வலிக்க, உரத்த குரலில், அந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாகப் பேசி விட்டுத்தான் வீடு திரும்பினார்.

புதுவை ராஜ்யத்தைவிட்டு 2.11.54 அன்று பிரெஞ்சுக்காரர்கள் வெளியேறினர். ராஜ்ய மக்கள் விடுதலை விழாக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

பெரியார் அன்பாக வளர்த்து வந்த சீட்டா 27.10.54 அன்று மறைந்து போனது. தமது பாசத்திற்கும் வாஞ்சைக்கும் வடிகாலாக விளங்கிய சீட்டாவின் மறைவு பெரியாரையும் சிறிது உலுக்கியது. பர்மா நாட்டின் தலைநகரான இரங்கூனில் நடைபெறும் மூன்றாவது