பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

257

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


பவுத்த மாநாட்டுக்கு வருகை தருமாறு பெரியாருக்கு அழைப்பு வந்திருந்தது. மன ஆறுதலுக்காக, உடனே ஒத்துக்கொண்டார்.

பெரியாரின் வான்மீகி ராமாயணப் பிரச்சாரத்துக்கு எதிரொலி போல நடிகவேள் எம்.ஆர். ராதா ஊரூராக ராமாயண நாடகத்தை நடத்தி வந்தார். அதில் வால்மீகியின் சித்தரிப்புப்படியே இராமன் குடிகாரன். ராதா இராமனாக வேடம் புனைந்து கையில் கள் மொந்தையுடன் மேடையில் வருவார். ஆத்திக மனம் புண்படாதோ மதுரையில் 2.12.54 அன்று எதிரிகளின் கைக்கூலிகள் நாடகக் கொட்டகையில் புகுந்து பயங்கரமான கலகம் விளைத்தனர். அவர்களைக் கையோடு பிடித்து வழக்குகூடப் போடப்பட்டது. பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். திருச்சியில் ராதா நாடகத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. அதை மீறி அவர் நாடகம் நடத்தப் போவதாக அறிவித்தார். 18.12.1954-ல் திருச்சியில் ராதா கைதானானர். அதே போல மீண்டும் கும்பகோணத்திலும் கைதானார். நாடகங்கள் திராவிட இயக்கத்தாரின் ஆதிக்கத்தில் இருப்பதாகக் கணக்கிட்ட காங்கிரஸ் ஆட்சி, ஆரிய சூழ்ச்சிக்குப் பலியாகி, நாடகங்களைக் கட்டுப்படுத்தும் மசோதா ஒன்றினைச் சட்ட மன்றத்தில் கொண்டு வந்தது. திராவிடப் பார்லிமெண்டரி கட்சியும், பிற எதிர்க்கட்சியினரும் எதிர்த்தனர். நாட்டு மக்களும் வெளியில் எதிர்ப்பினை உணர்த்தினர். 7.12.54 அன்று இந்த மசோதா செலக்ட் கமிட்டியின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. பெரியார் தாயகத்திலில்லாத நிலையிலும், தி.பொ. வேதாசலம் 19.12.54 கண்டன ஊர்வலம் திராவிடப் பார்லிமெண்டரி கட்சித் தலைவர் எஸ்.சுயம்பிரகாசம் தலைமையில் நடைபெறுமென அறிவித்ததற்கிணங்க, மக்கள் தமது மறுப்பையும், வெறுப்பையும் கண்கூடாகக் காட்டினார்கள். என்ன செய்து, என்ன பயன்? 21.12.54 அன்று நாடகக் கட்டுப்பாடு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

1954-நவம்பர் 23-ஆம் நாள் சென்னையை விட்டுப் புறப்பட்ட பயணிகள் கப்பல் எஸ்.எஸ். ஜலகோபால், சென்னை துறைமுகத்தில் இவ்வளவு பெரிய கருஞ்சட்டைக் கூட்டத்தைக் கண்டு, மறுபுறத்திலுள்ள கருங்கடலுக்கு ஒப்பிட்டிருக்கும். ரங்கூன் பவுத்த மாநாட்டுக்குப் பயணமான தந்தை பெரியாருடன் மணியம்மையார். ஆனைமலை ராமகிருஷ்ணம்மாள், ஆனைமலை ஏ.என். நரசிம்மன், சேலம் கே.ராசாராம் ஆகியோரும் புறப்பட்டுச் சென்றனர். ஐந்து நாள் கழித்து, இரங்கூன் துறைமுகத்துக்கு, ஜலகோபால் கப்பல் 28.11.54 காலை 8.30 மணிக்குப் போய்ச் சேர்ந்தது. பெருமகனாரின் வருகை குறித்து பர்மாவிலுள்ள பர்மன், பர்மாஸ்டார், தொண்டன் ஆகிய ஏடுகள் பிரமாதமான முறையில் விளம்பரம் செய்து வந்ததால், பெரியாரைச் சிறந்த முறையில் வரவேற்றிட ஏராளமான பர்மிய மக்களும், தமிழ் மக்களும் திரண்டு காத்திருந்தனர், நன்கு அலங்கரிக்-