பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

258


கப்பட்ட காரில் அமர்த்திப் பெரியாரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

பர்மிய விடுதலை வீரர் அவுங்சான் கல்லறைக்குப் பெரியார் 30.11.54 அன்றைய தினம் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பவுத்தர் மாநாட்டிற்கு வந்திருந்த ஏராளமான அறிஞர்கள் பெரியாரைச் சந்தித்து உரையாடினார்கள். 3.12.54 அன்று பெரியார் தமது அரிய கருத்துரையினை பவுத்தர் மாநாட்டுப் பிரதிநிதிகளிடையே வழங்கினார். டாக்டர் மல்லலசேகரா பெரியாரைச் சந்தித்துத் தனியே உரையாடினார். 5.12.64 அன்று டாக்டர் அம்பேத்கார் பெரியாரைச் சந்தித்துத், தாம் பவுத்த மதத்தில் சேர முடிவு செய்துவிட்டதாகக் கூறிப் பெரியாரையும் பவுத்த மதத்தில் சேர அழைத்தார். இந்து மதத்தில் இருந்து கொண்டே அதனை ஒழிக்கவே தாம் விரும்புவதாகவும், பவுத்தராக மாறிவிட்டால், இந்து மதத்தைத் திருத்தவோ, இந்துப் பிடிப்பிலிருந்து மக்களை மீட்கவோ தமக்கு உரிமையின்றிப் போகுமென்றும் விளக்கிப், பெரியார் அதற்கு உடன்படவில்லை. ஆயினும், டாக்டர் அம்பேத்கார், பெருங்கூட்டத்தோடு பவுத்தமதத்திற்கு மாற வேண்டுமென்ற தமது விழைவினைப் பெரியார் அம்பேத்காரிடம் தெரிவித்தார்.

பர்மாவிலிருந்த தமிழர்களான மயிலை பார்த்தசாரதி, தொண்டன் ஆசிரியர் ஏ.எம். இபுராகிம், கவிஞர் நாரா நாச்சியப்பன் ஆகியோர், பெரியாருக்கு நிறைய வரவேற்பும் தேநீர் விருந்தும், சிறப்பு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்திருந்தனர். அவுங்சான் படத்திறப்பு, நபிகள் நாயகம் விழா, இந்திய தேசிய ராணுவ வீரர்கள் கூட்டம், தொழிலாளர் சங்கக்கூட்டம் ஆகியவற்றில் பெரியார் கலந்து கொண்டார். 8.12.54 ஒருநாள் மோல்மீனுக்கு விமானத்தில் சென்று வருவதற்குள், இரங்கூனில் பெரியார் தங்கியிருந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த கடிகாரம் போன்ற சில பொருள்கள் திருட்டுப் போயிருந்தன!

1954 - டிசம்பர் 11-ஆம் நாள் இரங்கூனிலிருந்து சங்கோலியா என்ற கப்பலில் பெரியார் தமது குழுவினருடன் புறப்பட்டபோது பர்மாவிலிருந்த தோழர்கள், கண்ணீர் மல்க விடை கொடுத்து அனுப்பினர், 14-ந் தேதி காலை 11 மணியளவில் பெரியார் பினாங்குத் துறைமுகம் சென்று அடைந்தபோது, அங்கும் மகத்தான வரவேற்பு பெரியாருக்காக காத்திருந்தது. மலேயா நாட்டில் பெரியாருக்கு ஒரு நாள்கூட ஓய்வு தராமல் அவர் அதை என்றுமே விரும்புவதில்லை என்பதை உணர்ந்தோ என்னவோ ஏராளமான கணக்கற்ற நிகழ்ச்சிகளைத் தோழர்கள் அன்புடன் ஏற்பாடு செய்திருந்தனர். முன்கூட்டியே திட்டமிட்டுப் பெரியாரின் சுற்றுப் பயணம் முடிந்ததும், அப்படியே 28.12.1954 முதல் 8.1.1955 வரை சிங்கப்பூரில் பெரியார் தங்கிப்