பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

259

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


பல்வேறு பொதுச் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். 1955 ஜனவரி 9-ஆம் நாள் காலை 11 மணிக்கு, எஸ். எஸ். ரஜுலா கப்பலில், பெரியார் தம் உடன் வந்திருந்த குழுவினருடன் புறப்பட்டு, 17.1.55 காலை 7 மணிக்குச் சென்னைத் துறைமுகம் வந்து சேர்ந்தார். மலேயா ரேடியோவில் பெரியாரின் செய்தி ஒன்றினை ஒலிப்பதிவு செய்து கொண்டு போய் ஒலிபரப்பினார்கள். சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டபோது, தம் இயல்புக்கு மாறாகப் பெரியார், கண்களில் நீர் மல்க, விடை பெற்றார்! ஏறத்தாழ இரு திங்களுக்கு மேலாகவே தாய் முகங்காணாச் சேய்போல் வாடிய தமிழ் மக்கள் வாடிய பயிருக்கு மழை போன்ற பெரியாரை வரவேற்றுக் களிப்பில் கூத்தாடினர்!

பெரியார் இங்கில்லாத காலத்தில் நாடகக் கட்டுப்பாடு சட்டத்தை நிறைவேற்றிய காமராசர் ஆட்சி, ஒரு நல்ல சட்டத்தையும் அறிமுகம் செய்திருந்தது. கோயில் டிரஸ்டியாகத் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவரையும் சேர்த்துக் கொள்ளலாம் (கட்டாயமில்லை. கட்டாயம் ஒருவர் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று கலைஞர் ஆட்சி திருத்தியது) என்று 30.11.54-ல் நிறைவேறிய சட்டமே அது.

சமுதாயத்தில் மாற்றம் செய்ய விரும்பும்போது உலகத்தில் எதிர்ப்பு வருவது இயற்கையே. ஆனால் எந்த நாட்டுச் சரித்திரத்தைப் புரட்டினாலும் மாறுதல் இருந்தே தீரும். மாறுதல் செய்ய விரும்புபவன், கீழே விழுந்து, பல கஷ்டங்களை அனுபவித்துதான் ஆக வேண்டும்.

கட்டை வண்டி ஏறுகிறவன் ரயிலை வெறுப்பான்; பின் ரயிலின் அவசியத்தை உணர்ந்து ரயிலில் ஏறிப் பிரயாணம் செய்வான். நெய் விளக்கைத் தவிர வேறு எந்த விளக்கும் கூடாது; மண்ணெண்ணெய் கூடாது; என்று கூறியவர்கள் கூட, இன்று மின்சார விளக்குகளைப் பொருத்தியிருக்கிறார்கள்.

உலகம் நாளுக்கு நாள், மணிக்கு மணி, முன்னேறிக்கொண்டு போகும் போது, நமது தமிழர் சமூகம் மட்டிலும் சூத்திரப் பட்டத்துடன் பின்னேறிக்கொண்டு போகிறது. 2000 ஆண்டுகளாக சூத்திரர்கள் இருக்கிறார்கள். ஒரு பாவமும் அறியாத ஒரு குழந்தை பிறந்ததும், நடமாட ஆரம்பித்ததும், ஏன் சூத்திரனாக இருக்க வேண்டும்? இந்த இருபதாம் நூற்றாண்டிலும் புராண சாஸ்திர சம்பிரதாயங்களில் ஏன் சூத்திரப் பட்டம் இருக்க வேண்டும் என்று கேட்பது தப்பா?

அடிமை முத்திரை குத்தப்பட்டவர்களாக, விலை கொடுத்து வாங்கும் அடிமைகளாக அமெரிக்க நீக்ரோக்கள் நடத்தப்பட்டார்கள். லிங்கன் தோன்றினார்; மாறுதலைச் செய்தார். இன்று அந்தச் சமூகம் பிற இனத்தவர்களுடன் சரிசமானமாக வாழும் நிலையை ஏற்படுத்திக் கொண்டது!