பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

268


கொடி, தேசியக் கொடி என்கிறார்கள். நாம் கொளுத்தப் போவது சர்க்காரின் கொடியைத்தான்,” என்று பெரியார் விளக்கினார். இதற்காக ஜூலை 22 முதல் 31 வரை ஊரூராக இரயிலில் பிராயணம் செய்து தோழர்களை நேரில் சந்தித்து, உற்சாகமளித்து வந்தார். எல்லா ஊர்களிலும் யார் யார் எந்தெந்த இடத்தில் கொடி கொளுத்துவார்கள் என்பது வெளிப்படையாக, விவரத்துடன், எப்போதும் போல் திராவிடர் கழகத்தால் முன்னதாகவே வெளியிடப்பட்டு வந்தது. பத்தாயிரம் தோழர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றனர். ஆண்டாண்டு வெளியாகும் தீபாவளி கொண்டாடாத தீரர்கள் பட்டியலைக் காட்டிலும் இது நீண்டிருந்தது. கடந்த 1952, 1953 ஆண்டுகளில் ராஜாஜியும், 1954 ஆம் ஆண்டில் காமராசரும் முதல்வர்களாக வீற்றிருந்தபோது, இந்தி எழுத்து அழிக்கும் போராட்ட வீரர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளாமல் விட்டுவந்தார்கள், மற்றவர்கள் கேட்டபோது, தார் கொண்டு அழித்ததை மண்ணெண்ணெய் கொண்டு துடைத்தால் சீக்கிரமாகவும் சிக்கனமாகவும் விவகாரம் முடிந்து விடும்; ஆனால் நடவடிக்கை எடுத்தால் விரயமும் விபரீதமும் ஏற்படும் என்று ஆட்சியாளர் சமாதானம் கூறி வந்தனர்.

1955 கொடி கொளுத்தும் போராட்டம் பதற்ற நிலையைத் தோற்றுவித்திருந்தது. என்ன நேருமோ என்ற கவலை மக்கள் முகத்தில் தோய்ந்திருந்தது. எது நேரினும் சரியே என்ற உறுதி கருஞ்சட்டையினர் முகத்தில் பொலிந்தது. இந்தச் சூழலில்தான் காமராசர் 30.7.1955 அன்றே, தேர்வுகளில் இந்தி கட்டாயப் பாடமாக இருக்காது. மத்திய அரசின் சார்பிலும், மாநில அரசின் சார்பிலும் இந்தி எப்போதும்; எப்படியும் திணிக்கப்படமாட்டாது. என நான் உறுதி கூறுகிறேன். இந்த என் உறுதிமொழியை நம்பித் திராவிடர் கழகத்தினர் தேசியக் கொடி கொளுத்தும் போராட்டத்தைக் கைவிட வேண்டும். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டேன் என்று தமிழகத்து முதலமைச்சரான காமராசர் தெளிவாகக் குறிப்பிட்டார். குருடனுக்கு வேண்டியது கண்தானே? பின்னர், ரயில் நிலையைப் பலகைகளில் தமிழ் எழுத்து பெரிதாக மேலே எழுதப்பட்டுவிட்டது. இது பெரியார்க்கு வெற்றிதானே?

தண்டவாளங்களைப் பெயர்ப்பதால் வெள்ளையனை விரட்ட முடியுமென நினைத்தவர்கள் ஆட்சியில், தேசியக் கொடியைக் கொளுத்துவதால் இந்தியை விரட்ட முடியுமென நினைப்பது தவறா? காமராசரின் உறுதிமொழியைப் பெரிதும் நம்பி, இது இப்போதைக்கு போதும்; எனவே கொடி கொளுத்தும் போராட்டம் தற்காலிமாக ஒத்திவைக்கப்படுகிறது; நிறுத்தப்படவில்லை - என்பதாகப் பெரியார் தம் தோழர்களுக்கும், நாட்டுக்கும் ஒரே நற்செய்தியினை உடனே வழங்கினார்! ஆயினும், அத்துடன் பெரியாரை விடுவார்களா