பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

269

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


பத்திரிக்கையாளர்கள்? காமராசர் மிரட்டல், நாயக்கர் வாபஸ் என்றெல்லாம் தலைப்புத் தந்தார்கள், பெரியார்தான் அவர்களைச் சும்மா விட்டு வைப்பாரா?

“இந்தப் பிரச்சனையில் காமராசருக்கும் எனக்கும் பகை மூட்டிவிடப் பார்த்தார்கள். நடவடிக்கை எடுத்தாலும் எடுக்காமல் விட்டாலும், எப்படியும் அவரைத் தூற்றுவார்கள்; உசுப்பி விடுவார்கள்! ஆனால் நாங்கள் அதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தவில்லை, தேசியக் கொடியைக் கொளுத்தினால் அரசாங்கம் கையைக் கட்டிக் கொண்டு, வேடிக்கை பார்க்கும் என்று எதிர்பார்க்கிற பைத்தியகாரர்களல்ல நாங்கள். எந்த வித அடக்குமுறைக்குமே தயாராகத்தான் இதில் நாங்கள் இறங்கியுள்ளோம். கொடி என்றால் என்ன பிரமாத மகத்துவம்? களிமண்ணைக் கடவுள் என்பதற்கும் முழக் கந்தல் துணியை தேசியக் கொடி என்பதற்கும் என்ன பிரமாத வித்தியாசம்? பாரத மாதாவின் கொடி என்றால், என் நாட்டில் அன்னிய மொழியைப் புகுத்துவது ஏன்?

என்னைக்கூடப் போராட்டத்தை விட்டுவிட்டதாக அறிக்கை வெளியிடச் சொன்னார்கள். நான் அவ்வளவு ஏமாந்தவனல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்” என்று பெரியார் பேசினார்.

1955 ஆகஸ்ட் 7 ஆம் நாள் கல்வி மந்திரி சி. சுப்ரமணியமும், இந்தித் திணிப்பு என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதாகக் கூறினார். வழக்கம் போலவே ஆகஸ்டு 15 துக்க நாள் என்று பெரியார் அறிவித்தார். அடுத்து, முடிவு பெறாமல் தொங்கிக் கொண்டிருந்த தட்சிணப் பிரதேச அமைப்புப் பிரச்சனையில் கவனம் செலுத்தினார். இதற்கு எப்போதுமே திராவிடர் கழக ஆதரவு கிடையாது என்று திட்டவட்டமாக அறிவித்ததோடு, 1955 செப்டம்பர் 18 ஆம் நாள் தட்சிணப் பிரதேச எதிர்ப்பு ஊர்வலம் நடைபெறும் என்றும் தெரிவித்தார். இதனால் போராட்டம் ஒன்று நடந்துதான் தீரவேண்டும் என்றால், அதற்கும் தாம் தயாராயிருப்பதாகவும் பெரியார் கூறினார்.

பெரியாரின் 77 ஆவது பிறந்த நாளை நாடெங்கும் பெரும் சீர்சிறப்புடன் விழாவெடுக்கப்பட்டது. திருச்சியில் பெரியார் ஆசிரியர் பயிற்சி பள்ளி, தந்தை பெரியார் அவர்களுக்கு வரவேற்பு வழங்கி மகிழ்ந்தது. புதுவையில் அந்திய ஆட்சி அகன்று, தேர்தலும் நடந்து. புதிய சட்டமன்றம் தொடங்கியிருந்தது. 1.9.35 அன்று தமிழகக் கல்வித் துறையின் இயக்குநராக என்.டி. சுந்தர வடிவேலு எம். ஏ. எல்.டி பொறுப்பேற்றார்.

இந்தியப் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள், 3.10.1955 அன்று சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையின் முகப்புக் கொத்தளத்தின் மீது கொடி மரத்தினடியில் நின்று பேசினார். இந்தி