பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

270


தமிழர்கள் மீது திணிக்கப்பட மாட்டாது; இதை உறுதியாக நம்பலாம்; ஆனால் பார்ப்பானை விரட்டுவோம் என்றெல்லாம் வகுப்புவாதம் பேசுகிறார்களே என்று வருத்தமுற்றார். நேரு பண்டிதர் கொடி கொளுத்துவது பைத்தியக்காரத்தனம்; சும்மா விட மாட்டோம் என்றும் மிரட்டினார்.

நேருபிரானுக்குப் பதில் கூறுமுகத்தான், பெரியார் அதே திங்கள் 8ஆம் நாள் திருச்சியில் வீர கர்ச்சனை புரிந்தார்; “நேரு அவர்கள் தமது கடைசிக் கூட்டத்தில், கொடி கொளுத்துவதாகச் சொன்னவர்களைப் பற்றி மிகவும் துடுக்காகப் பேசியிருக்கிறார். அவருடைய பைத்தியகாரத்தனமான காரியங்களில் இதுவும் ஒன்றாகும். திராவிடர் கழகத்தாரை மிரட்ட வேண்டும், திட்ட வேண்டும் என்பது தவிர இதில் வேறொன்றும் இல்லை. கொடி கொளுத்துவதாகச் சொல்லப்பட்ட விஷயம், ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் சமரசமாக முடிந்து போன பிறகு, அதை மறுபடியும் சர்க்கார் தரப்பிலிருந்தே ஏன் கிளப்ப வேண்டும். இந்த அரசாங்கத்தை ஏதாவது மிரட்ட வேண்டுமானால், கொடியைக் கொளுத்துவோம் என்று சொல்வதே போதுமானது என்று தெரிகிறது!

கொடியைப் பற்றிய பிரமாதப்படுத்துவதும், அதை எரித்தால் உலகத்தையே சுட்டெரித்து விடுவதாக வீரப்பிரதாபம் பேசுவதும் வெறும் வீண் பேச்சே தவிர, மற்றபடி கொடியை எரித்தால் இவர்களால் என்ன செய்து விட முடியும்? அரசியல் சட்டத்திலாகட்டும், இந்தியன் பீனல் கோடிலாகட்டும், கொடிக்கு என்ன மரியாதை இருக்கிறது? அதை எரிப்பதற்கு என்ன தண்டனை இருக்கிறது?

“உலகத்தையே படைத்தாகக் கூறப்படும் கடவுள்களே எங்களிடம் அகப்பட்டுத் திண்டாடும் நேரத்தில், உங்கள் அரசாங்கக் கந்தல் துணி எம்மாத்திரம். நாங்கள் ஒளிவுமறைவாக எதையும் செய்யவில்லை. யாருக்கும் தெரியாமல், வீட்டுக்குள் கொளுத்தும் அண்டர் கிரவுண்ட் வேலை எங்களிடமில்லை. பகிரங்கமாக முச்சந்திகளில், தெருக்களில், அவரவர் வீட்டுக்கு முன்பு, பலபேர் அறியக் கொளுத்துகிறோம் என்றோமே. அரசாங்கத்துக்குத் தெரிவித்தோமே. உங்களால் என்ன செய்ய முடிந்தது? பாட்னாவில் மாணவர்கள் தேசியச் கொடியை எரித்தார்களே என்ன செய்தீர்கள்? உங்கள் வீரப் பிரதாபம் அப்போது அங்கே போனது?” என வினவினார்.

தர்மபுரி மாவட்டம், நாகரசம்பட்டியில், பெரியார் ராமசாமி கல்வி நிலையத்தை டாக்டர் பி. வரதராசலு நாயுடு திறந்து வைத்துப் பெரியாரின் தொண்டுகளை நினைவு கூர்ந்தார். 20.10.1965 ல் நடந்த