பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

271

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


இந்தத் திறப்பு விழா சிறப்புடன் அமைந்திருந்தது. மேற்கு வங்காள மாகாணத்தின் சிறந்த சமூகத் தொண்டரான ஹரேந்திரநாத் கோலே 9.12.55 அன்று சென்னைக்கு வந்து, பெரியாரைச் சந்தித்து, அளவளாவினார்.

கொடி கொளுத்தும் போராட்டம், தட்சிணப் பிரதேச எதிர்ப்புப் போராட்டம் இவற்றைப் போலவே ஆண்டு தவறாமல் தஞ்சையைத் தாக்கும் புயலின் வெறியாட்டம், இந்த ஆண்டும் கரையோரப் பகுதிகளைப் பெரிதும் பாதித்தது. தமிழ் நாட்டினுடைய முதலமைச்சரின் புயல் நிவாரண நிதிக்காகப் பெரியார், 7.12.1955 அன்று காமராசரிடம் ஆயிரம் ரூபாய் தந்து உதவினார்.

மனிதாபிமானத்தின் பாற்பட்ட இந்த நல்லெண்ணச் சமிக்ஞையினைத் தொடர்ந்து, மனித மானத்தின் பாற்பட்ட இந்தி எதிர்ப்புப் பிரச்சினை பெரியாரை ஈர்த்தது. பம்பாயில் முதலமைச்சராக இருந்த பி.ஜி. கெர் தலைமையில் மத்திய அரசு இந்திக் கமிஷன் ஒன்றை நியமித்திருந்தது. தமிழகத்தில் இந்திக்குத் தனிப்பட்ட நிரந்தர எதிர்ப்பு இருந்து வருவது ஏன் என நேரில் பலரையும் விசாரித்து, மெய்காணும் நோக்கத்துடன் அந்தக்குழு 9.1.1956 அன்று சென்னை வந்தது. சென்னையில் அந்த இந்திக் குழுவைத் திராவிடர் கழகம் புறக்கணிக்கிறது என்பதை எடுத்துக்காட்ட ஏ.பி. சனார்த்தனம் தலைமையில் கருப்புக்கொடி காட்டப்பட்டது. மனந்தளர்ந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல், அந்தக் குழுவின் தலைவர், “சென்னையில் சில நாள் தங்கியிருந்த போது, எங்கள் அழைப்பினை ஏற்று ராமசாமிப் பெரியார் வந்து, குழவின் முன்னர் தமது சாட்சியத்தைப் பகர்வார் என எதிர்பார்த்தேன். அவர் வராதது உண்மையில் எனக்குப் பெரிய ஏமாற்றமே” என்றார்.

1953 ல் ஆந்திர மாநிலம் பிரிந்த பின்னர் கர்நாடகம் கேரளம் ஆகிய மாநிலங்களின் அமைப்பு 1956 ல் பூர்த்தியடைய இருந்தது. ஆனால் எல்லைத் தகராறு தீர்க்கப்படாமல் தொடர்ந்து வந்தது. தமிழகத்துக்கே உரிமையான பல பகுதிகள் நமது ஏமாளித்தனத்தாலும், இளித்தவாய்த்தனத்தாலும் பறிபோகுமோ என்ற அச்சம் நாள்தோறும் இருந்து மிரட்டி வந்தது. தமிழ் மக்கள் ஒருமித்த குரலுடன், எமது பிரதேசத்தை நாங்கள் விட்டுக் கொடுக்கமாட்டோம் என்று முழங்கி வராமல் இல்லை . சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் முனைவராக இருந்து, எல்லைப் பிரச்சினையில் தமிழர் உரிமையை நிலைநாட்ட ஆவலுடைய பிறகட்சிகளின் ஆதரவைத் திரட்டி வந்தார். அது சம்பந்தமாகப் பெரியாரை அவர் சந்தித்துப் பேசினார். பின்னர் ஓர் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்துக்குப் பெரியாரையும் அழைத்துக், கலந்து கொள்ளக் கேட்டுக் கொண்டார். பெரியார் ஐந்து