பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

276


மாதத்தில் கும்பகோணம் மகாமகம். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவது. இதன் பித்தலாட்டங்களைப் பெரியார் ஆதார பூர்வமாக அம்பலப்படுத்திக், குளிக்கப் போய்ச் சேறு பூசிக் கொள்ளும் இம்மாதிரியான அறிவீனமான செயல்களில் நமது மக்கள் ஈடுபடவேண்டாமென அறிவுறுத்தினர். மிஸ் மேயோ நமது முட்டாள்தனமான பழக்க வழக்கங்களைக் கிண்டல் செய்தாள் என்று கோபித்துக் கொண்டோமே - நாம் அதற்குப் பிறகாவது திருந்தியிருக்கிறோமோ? மேயோ சுற்று மெய்யா பொய்யா என்று கோவை அய்யாமுத்துவைக் கொண்டு அப்போதே. அறிவு விளக்கப் புத்தகம் போட்டேனே!- என்ன பயன்? என்று கேட்டார் பெரியார்,

மதுரையில் டி.கே.எஸ் சகோதரர்களின் ராஜராஜ சோழன் நாடகம் நடந்தது. ஒரே நாளில் பெரியாரும் குன்றக்குடி அடிகளாரும், 13.6.1956 அன்று, நாடகத்துக்குத் தலைமை தாங்கிக் கருத்துரை வழங்கினார்கள்.

மதுரை சங்கரன் பிள்ளை என்பவர் பெரியாரின் நண்பர். அவரே பின்னாளில் சங்கரதாஸ் சுவாமிகள் ஆகி, இன்றைய நவீன நாடகத்தின் தந்தையானார், டி.கே.எஸ் சகோதரர் நால்வரும், பெரியாரின் கொள்கைகளில் முழு ஈடுபாடு இல்லாவிடினும் நல்ல அன்பும் மதிப்பும், பெரியாரிடமும் அண்ணாவிடமும் கொண்டாடிருந்தவர்கள். கலைஞர் ஆட்சியில் டி.கே.சண்முகம், அவர் மறைந்த பின்பு டி.கே பகவதியும் மேலவை உறுப்பினராக இருந்தார்கள், தமிழ் நாடக வளர்ச்சியில் அவர்கள் பெரும் பங்கு கொண்டவர்கள் டி.கே.சண்முகம் நன்கு பயின்று, தேர்ந்து தெளிவு கொண்டு, அரசியல் ஆர்வமும் படைத்திருந்தார். அவர்கள் வளர்த்த நாடகக்கலை யாரிடமோ சிக்கித் தவிப்பதாக நாடு நினைக்கிறது.

குன்றக்குடியில் பெரியார் பேசும்போது, பொது ஒழுக்கம் கெட்டுப் போன வரலாற்றைக் கோடிட்டுக் காட்டினார்:- மிருகப் பண்புகளே நமக்குத் தெய்விகப் பண்புகளாய் ஆயின. கடவுள், சமயம், பார்ப்பான் முதலியவற்றால், மனிதனுக்கோ, சமுதாயத்துக்கோ தேவையில்லாதவைகளே கடமைகளாக ஆக்கப்பட்டன. மனிதனை மனிதன் இம்சிப்பது, வஞ்சிப்பது போன்ற துஷ்ட மிருகங்களில் குணமே தெய்விக குணங்களாய் அமைந்துவிட்டன. அயோக்கியர்களுக்கும், துரோகிகளுக்கும் அரசியலில் முதலிடமே கிடைப்பது போலக் கடவுள், சமயத் துறையிலும் ஆகி, ஒழுக்கக்கேடு மலிந்து விட்டது. இதற்கு ஏதாவது பரிகாரம் தேட வேண்டுமானால், கடவுளும் சமயமும் பயன்படாது. ஒழுக்கமும் அன்பும் இல்லையானால் மனித சமுதாயமே வேண்டாம் என்று தோன்றுகிறது என்றார் பெரியார்.