பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

277

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



24.6.56 அன்று கடலூர் நகரசபை பெரியாருக்கு வரவேற்பளித்துக் சிறப்பித்தது. ஜூலை முதல் தேதி திருச்சியில் பெரியார் கலந்து கொள்ளும் மாபெரும் ஊர்வலம். அன்றைக்குப் பெரியாருக்கு உயர் இரத்த அழுத்தம் - ஹைபிளட்பிரஷர் 170 இருந்தது. இருந்தாலும் ஒத்துக் கொண்ட நிகழ்ச்சிகளை ரத்துச் செய்வதோ, நிகழ்ச்சிகளுக்குத் தாமதமாய்ப் போவதோ பெரியாருக்கு அறவே பிடிக்காத செயல்களாதலால், அதே நிலையில் பெரியார், நிகழ்ச்சியில் கலந்து கொண்டது. குறிப்பிடத்தக்கதாகும். தொடர்ந்து சுற்றுப் பிரயாணமும் சென்றார்.

1956 ஜூலை 8-ஆம் நாள் ஈரோட்டில் நடந்த புத்தர் மாநாட்டில் பெரியார் பங்கேற்று உரையாற்றும்போது, புத்தரைப் பின்பற்றி வேத மத சாஸ்திரங்களை ஒழிப்பதே எங்கள் இலட்சியம் என்றார். வான்மீகி ராமாயணம் சி.ஆர். சீனிவாசய்யங்கார் மொழி பெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டி, இராமன் சாதாரண மனிதனுக்குக் கீழானவன்; சீதை விபச்சாரி என்பதெல்லாம் எடுத்துக் கூறினார். இராமன் பட எரிப்புக்குக் கால் கோள் விழா போல, அன்றையப் பொதுகூட்டத்தில் இராமன் படம் எரிக்கப்பட்டது. அடுத்த வாரமே 15.8.56 அன்று சிதம்பரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளரும் “விடுதலை” ஆசிரியருமான குத்தூசி குருசாமி ஒரு இராமன் படத்தைக் கொளுத்தினார். அவர் மீது ஒரு வழக்குத் தொடரப்பட்டு, இழுக்கப்பட்டு, அவருக்கு 6.12.55 அன்று 5 நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 22.7.56 சிவகங்கையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் பெரியார் கலந்து கொண்டார். கி.வீரமணி பி.ஏ (ஆனர்ஸ்) கொடி ஏற்றி வைத்தார்.

திருச்சியில் 21.7.56 அன்று கூடிய நிர்வாகக் குழுவில். 1.8.56 அன்றைய தினம். நாடு முழுவதும், பெயர் கொடுத்துள்ள 8000 தொண்டர்கள் இராமன் படம் எரிப்பார்கள் என்றும், சென்னை வேப்பேரி டிராம்ஷெட் இடத்தைக், கழகத்துக்காக 1 லட்சம் ரூபாய் விலைக்கு வாங்கப்பட்டது என்றும், அது 50 மனை (கிரவுண்டு) பரப்புள்ளது என்றும், தெரிவிக்கப்பட்டது.

இராமன் பட எரிப்புக் கிளர்ச்சிக்கு முந்திய வாரமே, அரசுத் தரப்பில் கெடுபிடிகள் துவங்கின. ஊர்வலம், பொதுக் கூட்டங்களுக்குத் தடைகள் விதிக்கப்பட்டன. எப்படியும் இராமன் படம் கொளுத்தத் தோழர்கள் தீவிரமாயிருந்தனர். சென்னையிலும் ஊர்வலத்துக்கும் பொதுக் கூட்டத்துக்கும் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பெரியார் “விடுதலை”யில் தொடர்ந்து எழுதி, விளக்கி வந்தார். பெரியாரிடம் பேரன்பு பூண்ட டாக்டர் வரதராசலு நாயுடு, குன்றக்குடி அடிகளார் இருவருமே இராமன் பட எரிப்புக் கிளர்ச்சியைக் கைவிடுமாறு கோரினார். பெரியார் அமைதியுடன் அவர்களிருவருக்கும் அதன் மூலம்