பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

279

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



இப்போது திராவிட நாடு எது? அல்லது. ஏது? என்ற கேள்விகளுக்குப் பெரியார் 19.8.1956 ல் திருவண்ணாமலையில் பதில் கூறினார்:- வெள்ளைக்காரன் இருந்த காலத்தில் சென்னை மாகாணமாக இருந்ததைத்தான் திராவிட மாநாடு என்றும், தனியே சுதந்திர ஆட்சியுடன் பிரித்துத் தரப்பட வேண்டும் என்றும் வெள்ளைக்காரரிடம் கோரியிருந்தேன். இதெல்லாம் உங்கள் குடும்பச் சண்டை; நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் ; எனினும் நாங்கள் முஸ்லிம்களுக்குப் பிரித்துக்கொடுத்துவிட்டுப் போய் விடுகிறோம் என்று கூறி வெள்ளையன் நம்மைப் பார்ப்பனருக்கும், வடநாட்டாருக்கும் காட்டிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டான். இப்போது ஆந்திரம் பிரிந்து விட்டது. அடுத்து சென்னை மாகாணத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் இரண்டு மாவட்டம் தென் கன்னடம் கர்நாடகத்தோடும், தென் மலபார் கேரளத்தோடும் போய்விடும். மிச்சமுள்ளது தமிழ்நாடு. அந்தத் தனித்தமிழ்நாடே திராவிடநாடு; அதற்குத்தான் இனிச் சுதந்திரம் கேட்போம் என்று ஆய்வுரை புகன்றார் பெரியார்.

அடுத்து, 28-ஆம் நாள் மேலக்கற்கண்டார் கோட்டையிலும், 29.8.56 அன்று திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலும் பெரியார் அரிய உரை ஆற்றினார். நமது இலக்கியங்கள் வெறும் பக்திப் பாடல்தானே? தேவாரம் திருவாசகமெல்லாம் தமிழனின் வேதங்களாம்! கடவுளைக் கண்ணே மணியே என்று பிராத்தித்தால் அது வேதமாகுமா? அல்லது இலக்கியமாகுமா? ஆரியம் இங்கு வருவதற்கு முன்பு இருந்த இலக்கியமோ கலையோ ஒன்றாவது நமக்குக் கிடைத்ததா? மிகப்பழைய நூல் என்று சொல்லப்படும் தொல்காப்பியத்திலேயே ஆரியம் கலந்து விட்டது! சிலப்பதிகாரத்தில் ஆரிய மடமை கலக்காமல் ஒரு பத்து வரியாவது கிடைக்கிறதா?

யாரோ சில புலவர்கள்தாம் வள்ளுவர் அவ்வை கபிலர் போன்றவர்கள், ஒழுக்கத்தைப் பற்றிப் பாடினார்கள். மற்றவர்கள் எதுகை மோனையுடன் பாடிப் பிச்சைக்கோ பக்திக்கோ எழுதி வைத்தனர். ஒழுக்கத்திற்கான இலக்கியம் இல்லை, கலை இல்லை, கல்வி இல்லை, மதம் இல்லை, அரசும் இல்லையே?- என்று பெரியார் மிக்க வேதனையுடன் குறிப்பிட்டார்.

பெரியாரின் 78-வது பிறந்தநாள் நாடெங்கிலும் மிக எழுச்சியும் உணர்ச்சியும் கொப்புளிக்க கொண்டாடப்பட்டது.“விடுதலை” ஏடு சிறப்பு இதழ் வெளியிட்டது. இந்தியத் துணை ஜனாதிபதி டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் பெரியாரின் சேவைகளைப் புகழ்ந்து வாழ்த்துச் செய்தி அனுப்பினார். டாக்டர் வரதராசலு நாயுடு பெரியாருக்குச் சிலை எடுத்துச் சிறப்பிக்க வேண்டுமென எழுதினார். புரட்சிக் கவிஞர், டாக்டர் சுப்பராயன், கஜபதி நாயகர், ஆதித்தன், திருக்குறள் முளிசாமி, பி. ரத்னசாமிப்பிள்ளை ஆகியோரும் கட்டுரை தந்தனர். புதிதாக