பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

280


வாங்கப்பட்ட டிராம் ஷெட் சீர்திருத்தம் செய்யப்பட்டுப் புதிய தோற்றமும் ஏற்றமும் பெரியார் திடல் எனும் போற்றற்குரிய பொலிவு மிக்க புதுமைப் பெயரும் கொண்டு அழகின் எழிலின் இருப்பிடமாய்க் கோலங்கொண்டிருந்தது. அங்குதான் இந்த ஆண்டு பெரியார் பிறந்த நாள் விழா, பெரியார் தமது பிறந்த நாள் செய்தியாகப் பயங்கரமான ஒரு திட்டத்தைத் தெரிவித்தார். தம் தோழர்கள் மீது அவர்க்கிருந்த அசையா நம்பிக்கையைக் காண்பித்தது இது. அதாவது 5000 தோழர்கள் தூக்கு மேடை ஏறவும் தயாராயிருங்கள். தானேவரும் திராவிட நாடு - என்றார் பெரியார், துந்துபி முழங்கிடக் குடந்தை நகராட்சி மன்றம் பெரியாருக்கு 9.9.56 அன்று வரவேற்பு வழங்கிற்று. தலைவர் டாக்டர் வி.ஆர். மூர்த்தி, துணைத்தலைவர் பி.ஆர். பொன்னுசாமி, எஸ். கே. சாமி ஆகியோர் முன்னின்று விழா நடத்தினர்.

கோவையில் திவான் பகதூர் சி.எஸ். இரத்தின சபாபதி முதலியார் திடீரென்று 15.9.56 அன்று காலமானார். திராவிடர் இயக்கத் தொடர்பில்லாதவராயினும் திராவிடராயிற்றே! பெரியார், அவரது இறுதியாத்திரையில் பங்கேற்று, ஈரோடு வந்து, இரவோடு இரவாகச் சென்னை புறப்பட்டார். மறுநாள் தமக்குப் பிறந்த நாளாயிற்றே! ஈரோட்டிலிருந்து வேன் புறப்பட்டபோது, சென்னையில் பெரியார் திடல் சீரமைப்பு வேலைகளுக்குத் தேவைப்பட்ட 10 ஒட்டர்களை (ஓட்டர்களை அல்ல!) வேனில் ஏற்றி வந்தார். 10 பேருடைய ரயில் சார்ஜ் மிச்சந்தானே! 20.9.56 அன்று பெரியாருக்கு, நெஞ்சுருக்கும் செய்தி ஒன்று கிட்டிற்று. தூத்துக்குடி மாவீரன் கே.வி.கே.சாமி படுகொலை செய்யப்பட்டதுதான் அது!

திருச்சியை அடுத்துள்ள பொன்மலைப்பட்டியில் பெரியாரின் 78-வது பிறந்த நாளைப் புதுமை தவழக் கொண்டாடி மகிழ்ந்தனர் தோழர்கள். முதற் சிறப்பு தலைமை ஏற்று, நாம் பெற்ற அருஞ்செல்வம் பெரியார் என்று புகழ்ந்துரைத்தவர் தவத்திரு மகாசந்நிதானம் குன்றக்குடி அடிகளார். அடுத்த சிறப்பு பெரியாருக்குச் சமுதாயப் புரட்சி வீரர் என்று பொறிக்கப்பட்ட தங்கப்பதக்கம் வழங்கல்! மேலும், பொற்கிழி அளித்தல்! பொன்னாடை போர்த்தல்! ஆத்திகம் - நாத்திகம் பற்றி அங்கு நற்கருத்து நவின்றார் பெரியார். மக்களுக்கு ஆத்திகம்நாத்திகம் என்பதற்குப் பொருள் தெரிவதேயில்லை. நாத்திகன் என்றால் கடவுள் இல்லை என்று சொல்பவனும் அல்ல; இருக்கிறது என்று ஒப்புக் கொள்பவனும் அல்ல. என்னால் கடவுள் என்பது என்ன? அது எப்படிப்பட்டது? என்பதை இன்றளவும் புரிந்து கொள்ளமுடியவில்லை. நான் கண்டிப்பதெல்லாம் கடவுள்களைப் பற்றிய சேதிகளையே! யார் ஒருவன் பார்ப்பன ஆதாரங்களில் கைவைக்கிறானோ அவனுக்குத்தான் நாத்திகப்பட்டம் சூட்டியிருக்கிறார்கள், இது வரையில், குறைபாடுகளை, சமுதாய இழிதன்மையை ஒழிக்க நாங்கள் கையாள்வதுதான் சரியான முறை.