பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

282


கூடியதும் அன்றே! இதனுடைய பின் விளைவுகள் அடுத்த ஆண்டில் வெளிப்பட்டன.

அகிம்சையைப் பற்றிக் கேட்டவர்களிடையே பெரியார் பேசினார்:- அகிம்சையைப் பற்றி என்னைக் கேட்டால் அது கோழைத்தனம் என்பேன். இன்று அகிம்சை பிரயோசனப்படாது. நாம் அகிம்சையை நம்பிப் பேசி, நாசமாய்ப் போய்விட்டோம். இல்லாவிட்டால் நம்மைச் சூத்திரன், தேவடியாள் மகன், என்று சொல்வதைக் கேட்ட பின்னும், இங்கு ஒரு பார்ப்பாரக் குஞ்சு இருக்க முடியுமா? உலகத்தில் வேறெந்த ஜீவனும் தன் இனத்தைத் தானே அடித்துச் சாப்பிடுவதில்லை ; மனிதனைத் தவிர மனிதனை மனிதன் வஞ்சிப்பது. வதைப்பது, கொடுமைப்படுத்துவது இப்போது வளர்ந்துவிட்டது!

ஆகையினால் நமக்கு அவசியம் கத்தி வேண்டும். அரசர்கள் ஆயுதம் வைத்திருந்தார்கள்; கடவுளர்கள் ஆயுதம் வைத்திருக்கவில்லையா? அகிம்சை பேசிப் பேசித்தான் சமணமும் பவுத்தமும் அழிந்தன. சமணர்கள் கையிலும் கத்தியிருந்திருந்தால், சைவர்கள் அவர்களைக் கழுவில் ஏற்றியிருக்க முடியுமா? சைவம் ஆயுதத்தினால்தான் வென்றது! சைவம், அன்பு என்று சொல்வது; தாசி, காதல் என்று சொல்வது போலத்தான்! (திருச்சியில் 21.10.1956 அன்று) எப்படி, பெரியாரின் உவமை?

கழகத்தில் நீண்ட நாள் பிரச்சாரம் செய்தும், மாணவர் இயக்கத்தைக் கட்டிக் காத்தும், சோதனையான நேரத்தில் பெரியாரை நீங்காமல் நிலைத்தும் கழகப் பணியாற்றி வந்த வேலூர் ஏ.பி. சனார்த்தனம் - கேளம்பாக்கம் பொன்னுசாமி அவர்கள் புதல்வியும், கழகப் பெண் பேச்சாளராக முன்னணியில் நின்று, பம்பரமாய்ச் சுழன்று, பணியாற்றியவருமான மனோரஞ்சிதம்-இவர்களிருவரையும் பெரியாரே முன்னின்று தம்பதிகளாக்கினார். திருச்சியில் 4.11.56 அன்று, எளிமையாக நடைபெற்ற இந்த வாழ்க்கை ஒப்பந்த விழாவில், பெரியாருக்கு மனம் நிறைந்து தளும்பும் அளவு மகிழ்ச்சி; கழகத் தோழர்கள் தாமே முன் வந்து, மனமுவந்து, நிறைய அன்பளிப்புப் பொருள்கள் வழங்கியதில் அன்று மாலை நடந்த பொதுக் கூட்டத்தில் பெரியார் சொல்மாரி பொழிந்தார். ஆர். எஸ். மலையப்பன் பற்றித் தீர்ப்பு வழங்கிய இரு பார்ப்பன ஐக்கோர்ட் நீதிபதிகளை அங்குதான் கண்டித்துப் பேசினார்.

பெரியார் 28, 10.1956 அன்று (வேலுர் நகர் மன்ற வரவேற்பை ஏற்று, அங்கே டாக்டர் அம்பேத்கர் படத்தைத் திறந்து வைத்தார் 23.11.1956 அன்று மாயூரம் நகராட்சியின் வரவேற்பினைப் பெற்றுக் காமராசரின் திருவுருவப் படத்தினை அங்கு திறந்து வைத்தார். மறுநாள்