பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

283

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


மாயூரத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டிலும் பெரியார் பங்கு பெற்றார். 10.12.1956 அன்று, ஈரோட்டில், தமது அண்ணாரின் கடைசிப் புதல்வன் கஜராஜ் திருமணத்தைப், பெரியார் இருந்து நடத்தி வைத்தார்.

வடநாட்டின் இராமசாமிப் பெரியார் என்று உலக மக்களால் புகழ்ந்து ஏத்தப்பட்டவரும், அரசியல் சட்டத்தின் கர்த்தாவும், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலரும், ஆன டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், 7.12.1956 அன்று திடீரென மறைந்தார். பெரியார் ஆற்றொணாத் துயருற்றார், தமது அருமைச் சகாவின் மறைவினால்! டாக்டர் அம்பேத்கர் மறைவு இயற்கை மரணமா? அல்லவா? அவரது மகனின் நிலை என்ன? இரண்டாம் மனைவியின் நிலை என்ன?இப்படியெல்லாம் அப்போது பத்திரிகைத் தலைப்புகள்?

தமிழ் நாட்டில் தமிழை ஆட்சி மொழியாக்கும் மசோதா, 222.12.1956 அன்று சென்னை சட்ட மன்றத்தில் கொண்டு வரப்பட்டு, 27.12.56 அன்று சட்டமாகவும் நிறைவேற்றப்பட்டது. பெரியார் மகிழ்ச்சியுற்றுப் பாராட்டினார்.

கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும்; தமிழரால் பூசை செய்யப்பட வேண்டும் என்று பெரியார் அறிவித்ததையும், அதையொட்டி ஒரு போராட்டம் நடத்தப் போவதையும், குறிப்பிட்டுச் சில விளக்கங்கள் கோரி, குன்றக்குடி அடிகளார், பெரியாருக்கு 26.12.1956 தேதியிட்டு ஒரு திருமுகம் அனுப்பினார். அதற்கு நல்ல பார விளக்கங்களுடன் பெரியார் பதில் முடங்கலும் தீட்டியருளினார்: (1) தமிழ் நாட்டில் தமிழன் கோவிலில் உள்ள கடவுள் என்பவைகளுக்குத் தமிழில் பூசை செய்யப்பட வேண்டும். (2) தமிழ் நாட்டில் தமிழன் கோயிலுக்குள் தமிழரால் பூசை செய்யப்பட வேண்டும். இந்த இரண்டு காரியங்களும் தமிழனின் தன்மானத்தையும், தமிழ் மொழியின் தன்மானத்தையும் பற்றியவையாகும். தமிழ் மிலேச்ச மொழி என்பதாலும், தமிழன் சூத்திரன் என்பதாலுமே இந்த உரிமைகள் மறுக்கப்படுகின்றன. நான் தமிழன் என்று கருதுவது நம் நாட்டிலுள்ள “சூத்திரர்”களையேயாகும்.

நாம் இருவரும் நட்பு முறையில் அன்பர்கள் ஆவோம். கொள்கைகளில் ஒன்றுபட்டவர்களாக இருக்க வாய்ப்பு இல்லாது போயினும், ஒன்றுபட்ட இலட்சியங்களுக்கு மக்கள் நலனையும் தமிழர் தன்மானத்தையும் முன்னிட்டுச், செய்ய இயன்றதைச் செய்வோம்! எனவே அருள் கூர்ந்து என் முயற்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டுகிறேன். குற்றமிருப்பின் மன்னித்தருள்க- என்பதாக அமைந்தது பெரியாரின் கடிதம்.

காந்தியடிகளின் முதல் சீடரான ஆச்சாரிய வினோபாபாவே, திருச்சி மாவட்டத்தில் கால் நடையாகச் சென்று, நிலக்கொடை பெற்று