பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

289

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


சனார்த்தனம் ஆகியோர் முன் வந்தனர். பெரியாரும் வந்து மேற்பார்வையிட்டார். ஓட்டல் முதலாளியிடம் கேட்டுக் கொண்டும். இசையவில்லை, அழிக்க முயன்றவர்களைப் போலீசார் கைது செய்தனர். நாள்தோறும் இந்தக் கிளர்ச்சி இடைவிடாமல் நடத்தப்பட்டு வந்தது. 2.12.57 அன்று 210 ஆம் நாள் கிளர்ச்சி வரையில் கைதாகி தண்டனை பெற்றோர் 837 பேர்.

திருச்சியில் 16.6.57 அன்று நடைபெற்ற சாதி ஒழிப்பு மாநாட்டின் தலைவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் திறப்பாளர் ஏ.பி. சனார்த்தனம். பெரியார், குருசாமி, வீரமணி ஆகியோர் பங்கேற்றனர். பார்ப்பனர் ஓட்டலில் யாரும் உண்ணுவதில்லை என முடிவு மேற்கொள்ளப்ட்டு, அவ்வாறு புறக்கணித்தோர் பட்டியல் தினந்தோறும் “விடுதலை” யில் வெளிவந்து கொண்டிருந்தது. தஞ்சை மாவட்டத்திலிருந்து, சாதி ஒழிப்புப் பிரச்சாரப் படை ஒன்று, 20.6.57 அன்று புறப்பட்டு, நடந்தே பிரச்சாரம் செய்து கொண்டு, 30.7.57 அன்று சென்னை வந்து சேர்ந்தது. 22 கருஞ்சட்டை வீரர்களடங்கிய இப்பட்டாளத்தின் தலைவர் நீடாமங்கலம் அ. ஆறுமுகம்; தளபதி ஆனைமலை நரசிம்மன் பி.ஏ. வழியெங்கும் கழகத் தோழர்கள் வரவேற்று, வாழ்த்தி, வழியனுப்பி வைத்தனர். இவர்கள் செலவுக்கு, சென்னையில் அழிப்புக் கிளர்ச்சியில் ஈடுபடுவோர்க்கும் சேர்த்து, நிதியும், அரிசி பருப்புச் சாமான்களும் குவிந்தன. பிரச்சாரப் படையினர் இவற்றையும் விடாமல் திரட்டி வர, இவர்கள் பின்னால் ஓர் இரட்டை மாட்டு வண்டியும் தொடர்ந்தது. சாதி ஒழிப்புப் படையினர் சென்னை சேர்ந்த போது, அவர்களுக்குக் கழகம் மாத்திரம் வரவேற்புத் தந்து மகிழவில்லை அரசும் அவர்கள் வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தது? சாதி ஒழிப்புப் படையின் தலைவருக்கும், தளபதிக்கும் 2.8.57 அன்று 5 வாரம் சிறைத் தண்டனைப் பரிசு கிடைத்தது!.

23.7.57 அதிகாலை 1.40 மணிக்கு டாக்டர் பி. வரதராசலு நாயுடு காலமாகி விட்டார். “தலைமையிடம் காலி” என்று பெரியார் “விடுதலை”யில் எழுதினார். 40 ஆண்டுகட்கு மேலாகப் பழகியவர். தமிழகக் காங்கிரசை நிலைநிறுத்திய நாயுடு - நாயக்கர் - முதலியார் ஆகிய மும்மூர்த்திகளில் ஒருவர். அவரைவிட ஜூனியர்களெல்லாம் பெரிய நிலைக்கு வந்தும், அவர் ஒரு பார்ப்பனரல்லாதாராக இருந்ததால், மேலே உயர முடியவில்லை. ஏராளமான வருமானத்தை இழந்து விட்டுத்தான், அவர் காங்கிரசில் உழைத்தார். காங்கிரசால் பலனடையாத தலைவரும் அவர்தான். இனி அவருக்குப் பின் அங்கு தலைவர்களே கிடையாது என்று டாக்டர் நாயுடு அவர்களின் மனைவியார் ருக்மணியம்மாள் அவர்களுக்குப் பெரியார் தெரிவித்துக் கொண்டார். (கலைஞர் ஆட்சியில் டாக்டர் நாயுடுவின் மனைவியாருக்கு அரசினர் தோட்டத்தில் இலவசமாக வீடு ஒன்று குடியிருக்கத் தரப்பட்டிருந்தது)