பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

290



1957 ஆகஸ்டு 15 வழக்கம் போல் பெரியார் கண்ணோட்டத்தில் துக்க நாள்! ஆனால், இந்த ஆண்டு பெரியாரின் ஆத்திரம், எந்த ஒரு குறிப்பிட்ட நாளின் மீது அல்ல: இதற்குக் காரண கர்த்தாவான் காந்தி மீது திருச்சியில் கூடிய நிர்வாகக் குழுவில், காந்தி பொம்மையை உடைப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. அதற்கான நாளாக,ஆகஸ்டு 13 தேர்ந்தெடுக்கப்பட்டது. இதை நியாயப்படுத்திப் பெரியார் பல பொதுக்கூட்டங்களில் பேசினார். “காந்தியால் நமது சமுதாயத்திற்கு ஒரு நன்மையும் ஏற்படவில்லை அவரால்தான் நாம் வட நாட்டார்க்கும் பார்ப்பானுக்கும் அடிமைகளாக இருக்கிறோம். காந்தியால் ஒழுக்கக் கேடும், பித்தலாட்டமும் அரசியல் சூதாட்டமும், ஜனநாயக வஞ்சகமும் வளர்ந்து விட்டன. சுயராஜ்யம் பெற்றுப் பத்தாண்டுகளாகியும், என்ன பலன்? காந்தி ஒன்றும் அவதார புருஷரல்லர். பார்ப்பான், பாமர மக்களுக்கு அப்படி ஓர் நம்பிக்கையை உண்டாக்கினான். அவர், வர்ணாசிரம தர்மம் அப்படியே இருக்க வேண்டும் என்றவர். தீண்டாதவர்களுக்கு, எல்லாமே தனியாக அமைத்துத் தர வேண்டும் என்றவர். நானே இந்த நாட்டிற்கு ‘காந்தி நாடு’ என்று பெயர் வைக்க சொன்னேன்; அவர் மறைந்த அன்றைக்கே இப்போது, காந்தி சிலையை உடைப்போம்; காந்தி படத்தைக் கொளுத்துவோம் என்கிறேன். காந்தி செய்து பித்தலாட்டங்களை ஜின்னாவும், அம்பேத்கரும் அறிந்ததைவிட, நான் நன்றாக அறிந்தவன். காந்தி செய்த மோசடிகளை மக்களுக்குத் தெரிவிப்பேன். அவர் தவறே செய்யவில்லை என்று வேண்டுமானால் யாராவது என்னிடம் வாதாடிப்பார்க்கட்டும்! காந்தி படத்தை எரிக்கக் கூடாது என்பவர்கள், சாதி ஒழிய வேறு ஒரு வழி சொல்லட்டுமே” என்றார் பெரியார்.

18.8.57 அன்று வட ஆர்க்காடு மாவட்டத்திலிருந்தும், சாதி ஒழிப்புப் பிரச்சாரப் படை ஒன்று புறப்பட்டுக், கால் நடையாகச் சென்னை சென்றடைந்தது. ஆகஸ்டு 1 ந் தேதி எஸ். குருசாமியும் மற்ற சென்னை மாவட்டக் கழகத் தோழர்களும், பிராமணாள் அழிப்புப் போராட்டத்துக்கு நிதி திரட்டுவதற்காகக், கொத்தவலால் சாவடிப் பகுதியில், உண்டியல் மூலம் வசூலித்து வந்த போது, போலீசார், இவர்கள் பிச்சை எடுத்தார்கள் என்று கூறி வழக்குப் போட்டு, 3 வாரம், 4 வாரம் சிறைத்தண்டணை வழங்கப்பட்டது. ஆனால், முன்னதாகவே 14.8.57 அன்று எல்லாரும் விடுதலையானார்கள். கலைவாணர் என், எஸ். கிருஷ்ணன் 1957 ஆகஸ்டு 30 ஆம் நாள் சென்னையில் மறைந்து போனார். நாடகமும் சினிமாவும் நாட்டுக்குக் கேடு என்று நினைக்கும் பெரியாரையும் தம்பால் ஈர்த்த புரட்சி வீரர் கலைவாணர். கடைசி வரையில் திரையுலகில், பகுத்தறிவுக் கசப்பு மருந்தை நகைச்சுவைத் தேனில் குழைத்து ஊட்டி வந்தார். தாமே நொந்து போன நிலையிலும், வந்தாரை வரவேற்று ஆதரிக்கும் வள்ளல் மனம் படைத்தவர் யார் யாரோ தமக்குச் சொந்தமானவரென்று நினைத்து