பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

291

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


உரிமை கொண்டாடினாலும், அவர் தொடர்பெல்லாம் திராவிட இயக்கத்துடனேதான்! அவர் சிறைப்பட்ட போது பெரியார் உள்ளமுருகினார். மறைந்த போது அளவிறந்த துயருற்றார்.

இந்தித் திணிப்புக்கு மத்திய அரசு மீண்டும் வாலை நீட்டிப் பார்த்தது. “விடுதலை” ஏட்டில், கொட்டை எழுத்தில், 4.9.57 அன்றும், தோடர்ந்தும், ஒரு பெட்டிச் செய்தி வெளியிடப்பட்டது:- இந்திப் பிசாசு மீண்டும் தலையெடுக்கிறது; தமிழர்களே மண்டையிலடிக்கத் தயாராகுங்கள்! - என்பதாக, பள்ளிப் பிள்ளைகளுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை அரசே வெளியிட வேண்டுமெனப் பெரியார் யோசனை கூறிவந்தார். அதனை ஏற்றுக் கொண்டது போல், 13.9.57 அன்று அரசாணை பிறப்பிக்கவே, இது பெரியாரின் வெற்றிதான் என்று கல்வியாளர்களால் பேசப்பட்டது. இந்திப் பாம்பைக் கொல்லுங்கள் என்று, 6.9.57 அன்று தலையங்கம் தீட்டியது “விடுதலை” ஏடு.

நுங்கம்பாக்கத்தில் இந்தி எதிர்ப்பாளர்கள் கூட்டம் என்பதாக எல்லாக் கட்சிக்காரர்களையும் அழைத்து நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தில் தமது பேச்சைப் பற்றிப் பெரியாரே குறிப்பிடுகின்றார்:“அந்தக் கூட்டத்தில் பேசிய திருவாளர் இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தமிழ்நாட்டுக்கு ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று பேசினார். ஆங்கிலமே போதனா மொழியாக இருக்க வேண்டும் என்றும் பேசினார். பிறகு நான் பேசும் போதும் அதுபோலவே பேசிவிட்டு, - ஆங்கிலம் பேச்சு மொழியாக இருந்தாலும் மிகவும் பயன்படும் என்றும் சொன்னேன்.

தமிழின் மூலமோ, தமிழ் இலக்கியத்தின் மூலமோ, தமிழ்ச் சமயம் - தமிழ்ப் பண்பாடு மூலமோ நாம் உலக மக்கள் முன்னிலையில் ஒரு நாளும் இருக்க முடியாது. தமிழ் வடமொழியைவிட, இந்தி மொழியை விடச் சிறந்தது என்பதிலும், பயன்படத்தக்கது என்பதிலும் எனக்கு அய்யமில்லை என்றாலும், நாம் இன்றைய நிலைமையைவிட வேகமாக முன்னேற வேண்டுமானால் ஆங்கிலந்தான் சிறந்த சாதனம் என்றும், ஆங்கிலமே அரசியல் மொழியாகவும், போதனா மொழியாகவும், இருந்தாக வேண்டும் என்றும், ஆங்கில எழுத்துகளே தமிழ் நெடுங்கணக்கு எழுத்துகளாக ஆவது அவசியம் என்றும், ஆங்கிலமே நம் பேச்சு மொழியாக ஆவது நலம் பயக்கும் என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.”

தந்தை பெரியாரின் 79 - வது பிறந்த நாளைத் தஞ்சைத் தரணி புதுமுறையில் கொண்டாடிச் சிறப்பிக்கத் திட்டமிட்டது. சேலம் போன்ற ஊர்களில் பெரியார் பிறந்த நாளை பொலிவுடன் கொண்டாடி, இந்திச் சனியனைத் தாக்கவும், சாதியைப் போக்கவும், இழிவினை நீக்கவும் உதவியாகப் பெரியாருக்கு வெள்ளியாலான வாள், சம்மட்டி,