பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

295

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


கிடக்கிறார்கள். விசாரிக்கின்ற நீதிபதிகளை எதிரில் வைத்துக்கொண்டு, ஒரு பெரிய ஆட்சித் தலைவர், ‘இவர்களைவிடாதோ இவர்கள் சிறையிலிருக்கத்தக்கவர்கள். மன்னிக்கத்தக்கவர்களல்ல’ என்பது போல் பேசினால், இந்த ஆட்சி எவ்வளவு நீதியும், நேர்மையும், நாணயமும் உள்ள ஆட்சியாகும்.

12 ந் தேதி வழக்கு விசாரணை: திருச்சி மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் ஆறு செக்‌ஷன்களின் கீழ் தொடரப்பட்ட என் மீதான வழக்கு, இப்போது திருச்சி செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணை, 9ந் தேதி திருச்சியில் வந்து நேரு இப்படிப் பேசினால், எக்காளமிட்டுச் சென்றால், இந்த ஆட்சியின் கொடி, ஆட்சியின் சட்டம் இவைகளை மட்டுமல்லாமல்; ஆட்சி முறை, ஆட்சி நீதி, ஆட்சி பீடம் இவற்றையும் சுட்டுப் பொசுக்குவது தானே சரியாகும். நமக்கு இப்போது நலமான வாழ்வோ, நீதியோ கிடைக்குமோ? சிந்தித்துப் பாருங்கள்! தமிழர்களே! சிந்தித்துப் பாருங்கள்! தமிழர்களே!” 11.12.57 “விடுதலை”யில் இது பெரியார் தலையங்கம்.

திருச்சியில் பெரியார், 6.11.57 அன்று கைதாகி, அவர்மீது ஆறு செக்‌ஷன்களின் கீழ் வழக்குத் தொடரப்பட்டதல்லவா? திருச்சி மாவட்டத்திலுள்ள குளித்தலையில் 1957 அக்டோபர் 5 ஆம் நாளும், பசுபதிபாளையத்தில் 13 ஆம் நாளில், திருச்சியில் 20 ஆம் நாளும், பெரியார் பேசிய பேச்சுக்களுக்காகத்தான் வழக்கு. திருச்சி மாவட்ட செஷனஸ் நீதிபதி எஸ். சிவசுப்பிரமணிய நாடார் 14.12.57 அன்று, இந்த மூன்று பேச்சுக்களும் தனித்தனியே ஆறுமாதத் தண்டனை அளித்து, மூன்றையும் ஏக காலத்தில் அனுபவிக்குமாறு தீர்ப்பளித்தார்.

அந்தப் பிரதிநிதி பெற்ற தீர்ப்பின் சில பகுதிகள், என்றும் நினைவில் கொள்ளத் தக்கவை; பெரியாரைப் பற்றிய சரியான மதிப்பீடு:- “மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் திராவிடப் பெருங்குடி மக்கள் பார்ப்பன ஆதிக்கத்தின் கீழ் வருகிறார்கள். பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்ற பொருளை உடைய சூத்திரன் என்ற இழிபட்டத்தை அவர்கள் ஏற்கும்படிச் செய்யப்பட்டதுடன், அதை நம்புவதற்காக வேத சாஸ்திர புராண இதிகாசங்களும் பார்ப்பனரால் எழுதப்பட்டன. திராவிடர்கள் சாதாரண ஊழியர்களாக உழல்கையில், பார்ப்பனர்கள் உத்தியோக மண்டலம் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார்கள்.

வெள்ளைக்காரர் ஆட்சி இந்நாட்டை விட்டுப் போனதும் நிலைமை மேலும் மோசமாயிற்று.

இந்திய அரசியல் சட்டம் பார்ப்பனர்களால் ஏற்படுத்தப்பட்டது. பிரதமரும் ஜனாதிபதியும் பார்ப்பனர்கள். இராஜ்ய மந்திரிகளோ, அதிகாரமற்றவர்கள். இந்நிலையில் அரசியல் சட்டத்தைத் திருத்துவதோ அவ்வளவு எளிதல்ல; எனவே சட்டவரம்புகளுக்கு