பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

302


திராவிடர் கழகம் நேருவுக்குக் கருப்பு கொடி காட்ட வேண்டாம்” என்று தெரிவித்து விட்டார். சட்ட மன்றம் நடந்து கொண்டிருந்தது. காமராசத் முதல்வராயிருந்ததால், எப்படியாவது கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தைத் தவிர்த்திடப் பல வழிமுறைகளைக் கையாண்டார். “சண்டே அப்சர்வர்” பி. பாலசுப்ரமணியம் பகடைக் காயாகப் பயன்பட்டார். கருப்புக் கொடி வேண்டாம். அல்லது ஒரு இடத்தில் மட்டும் பிடிக்கலாமே என்று இவர் அண்ணாவிடம் பேசினார்; அண்ணா இணங்க மறுத்தார். பெரியாரிடம் தவறான தகவல் அதாவது அண்ணாவே பயந்து கொண்டு பின் வாங்குவதாகச் செய்தி திரித்துக் கூறப்பட்டது. கருப்புக்கொடி பிடிக்க அனுமதி தரப்பட்டுள்ளதாகச் சட்டமன்றத்தில் உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் கூறினார். ஆனால் நடந்தது வேறு! 4.1.1958 மாலை அண்ணா, கலைஞர் ஆகிய முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தி. மு. கழகத்தின் எம்.எல்.ஏ 14 பேரும், எம்.பி. 2 பேரும் சிறைப்பட்டனர். நடிகர்களும் கைதாயினர். எனினும் மீனம்பாக்கத்திலிருந்து மவுண்ட்ரோடு வரை 6.1.58 அன்று நேரு கருங்கொடிக் காடு கண்டு, பாதை மாற்றிச் செல்ல நேரிட்டது.

பெரியாருக்குச் சிறையில் அஜீரணமும், பல தொல்லைகளும் ஏற்பட்டன. 5.1.58 அன்று சென்னைப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர் ரத்னவேல் சுப்ரமணியம் போன்றோர், பெரியாரின் வயதையும் உடல் நிலையையும் கருத்தில் கொண்டு, அவரை உதகையில் தங்கச் செய்வதே உசிதம் என்று பரிந்துரைத்தனர். ஆனால் பெரியாரோ, தாம் சிறையிலிருப்பதுதான் நியாயமென்று கூறி, வெளியில் வர மறுத்து விட்டார். பின்னர் அவரை மருத்துவமனையில் தங்கச் செய்வதே மிகுந்த சிரமமாகி விட்டது அவர்களுக்கு எப்படியோ இந்த முறை பெரியார் விடுதலையாகும். வரை சென்னைப் பொது மருத்துவ மனையில் நீடிக்கும் நிலை வாய்த்தது! உண்மை தெரியாத சிலர், பெரியார் சிறைக்குப் பயந்து மருத்துமனையிலிருப்பதாக எண்ணினர். “பெரியாரை விடுதலை செய்யக் கோரி நாங்கள் கிளர்ச்சி செய்யத் தயாராயிருக்கிறோம். ஆனால் பெரியாரே இதை விரும்பமாட்டார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்? என்று அறிஞர் அண்ணா சொன்னது 7.1.58 “விடுதலை” ஏட்டிலும் வெளியாயிற்று. உண்மை தான்! பெரியாரை விடுதலை செய்யக் கோரி யாரும் தீர்மானங்கூட நிறைவேற்றக் கூடாது எனத் திராவிடர் கழகம் ஆணையிட்டது. அத்துடன், பெரியார் மருத்துவமனையிலிருந்தாலும் அது சிறைதான்; எனவே யாரும் பார்வையாளர் வரக்கூடாது என்பதும் வற்புறுத்தப் பட்டது. 8.5.58 அன்று மணியம்மையார், சிறைப்பட்டிருந்த தோழர்களின் குடும்பத்தினரைக் கண்டு உரையாடினார்.

6ந்தேதி சென்னையில் நடத்த அமளிகளுக்கு மூலக்காரணம் பிரதமர் நேருதான் என்றும், மேலும் இந்தித் திணிப்புக்குக் கண்டனம் தெரிவித்தும், ஆங்கிலம் நீடிக்க அரசியல் சட்டம் திருத்தப்பட