பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

303

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


வேண்டும் என்றும் ராஜாஜி கருத்துரை வழங்கினார். அனைத்திந்திய காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில், தென்னகத்துக் காங்கிரஸ் கல்வி அமைச்சர்கள் சார்பில், சி. சுப்ரமணியம் வாதாடி, 1965க்குப் பிறகு ஆங்கிலம் நீடிக்க வகை செய்யக் கேட்டுக் கொண்டார். அது ஏற்றுக் கொள்ளப் பெற்றது. டாக்டர் ராம் மனோகர் லோகியா, அரசு அனுமதியோடு பெரியாரை 23.1.68 ல் சந்தித்துப் பேசினார்; சாதி ஒழிப்புப் பணிகளைப் புகழ்ந்தார். பின்னர் தன் ஊருக்குச் சென்றதும் பெரியாரின் விடுதலை கோரிச் சொற்பொழிவாற்றினார். பினாங்கு நகரில் பெரியார் பிறந்த நாள் மணிமண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டதாகச் செய்தி வந்தது.

பெரியார் வெளியில் இல்லாவிடினும் தொய்வின்றி ஆக்கப் பணிகள் நடைபெற்றன. திருச்சியில் சாதி ஒழிப்பு மாநாடு நடை பெற்றது. சனவரி 26 குடி அரசு நாள் துக்க நாள் என்று வழக்கம்போல் அறிவிக்கப்பட்டது. பேச்சாளர்கள் கண்ணியமாகவும், யாரையும் குறை கூறாமலும் தாக்காமலும் பேச அறிவுறுத்தப்பட்டது. இதற்கிடையில் யாரோ ஒருவர் நேரு படத்தைக் கொளுத்தி 3 நாள் சிறைத்தண்டனை பெற்றார். சீரங்கத்தில் அரசு வழக்கறிஞர் ஈ. வி. சீனிவாசாச்சாரியார் முகத்தில் அக்கினித் திராவகம் வீசியதாக, சின்னசாமி தியாகு என்ற இருவர்மீது 28.1.58ல் வழக்குத் தொடரப்பட்டுப், பின்னர், 8.8.58ல் அவர்கள் நிரபராதிகளென விடுவிக்கப்பட்டனர். இந்த இரு செயல்களுக்கும், திராவிடர் கழகத்துக்கும் தொடர்பில்லையென்பது கழகத்தின் சார்பில் தெளிவாக்கப் பெற்றது. சி.பா ஆதித்தனார் 9.2.58 அன்று தமிழ்நாடு விடுதலை இயக்கம் தொடங்கினார்.

சிறையிலிருந்தவாறே பெரியார், நேருமீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். வழக்கறிஞர்கள் துறையூர் ரங்கசாமி எம், எச் ராவ் இருவரும்! 12.2.58 அன்று எடுத்துக் கொள்ளப்பட்ட இவ்வழக்கு, ஆக்டிங் பிரதம நீதிபதி பி. ராஜகோபாலன், நீதிபதி எஸ் ராமசந்திர அய்யர் ஆகியோரால் 22.2.58 அன்று தள்ளுபடி செய்யப் பெற்றது. கோவைச் சிறைக்கு மணியம்மையார் சென்று அங்கிருந்த தோழர்களைக் கண்டு பேசினார். சிறையிலுள்ள தோழர்களின் குடும்பத்துக்கு உதவுமாறு தி.பொ. வேதாசலனார் அறிக்கையில் வேண்டினார். வடவேற்குடி திருஞானசம்பந்தம், நீடாமங்கலம் சரவணன் (இராவணன்) போன்றார் சுறுசுறுப்புடன் பணியாற்றினர், முந்திரா ஊழலில் டி.டி கிருஷ்ணமாச்சாரி பதவி விலகல், நெய்வேலியில் பார்ப்பனர் ஆதிக்கம், காமராசருக்கு ஏழை மாணவர் கல்வியில் அக்கறை, அபுல்கலாம் ஆசாத் மரணம், தண்டணை முடிந்து விடுதலையாகும் தோழர் தோழியர்க்கு அன்றாடம் ஆங்காங்கு வரவேற்பு ஆகிய செய்திகளை “விடுதலை” ஏடு நாடோறும் வெளியிட்டு வந்தது.