பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

305

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


கண்டிருந்தது. அப்படியும் அவர் தினந்தோறும், ‘எப்போது ஜெயிலுக்குள் போவது?’ என்று கேட்ட வண்ணம் இருந்தார். தேவிகுளம் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வென்றார்; காங்கிரஸ், கண்ணீர்த்துளி வேட்பாளர்கள் தோற்றனர். தூத்துக்குடி தேர்தலில் காங்கிரஸ் வென்று, கம்யூனிஸ்ட், கண்ணீர்த் துளி தோற்றன. பி. பாலசுப்ரமணியம் 22.5.58 அன்று மறைந்த போது, பெரியார் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

“கூண்டுக்குள் சிங்கம். இன்று 156வது நாள், இன்னும் எத்தனை நாள்? ” என்று 18.5.58 தேதி வரை “விடுதலை” வெளியிட்டது. ஆனால் 19.5.58 “விடுதலை” கூண்டுக்குள் சிங்கம். இன்னும் 25 நாட்களே” என்று முடிவாகச் செய்தி பிரசுரித்தது. 1958 ஜுன் 13 ஆம் நாள், பெரியார், காலை 10 மணியளவில் விடுதலை செய்யப்பட்டார். பொது மருத்துவமனையிலிருந்து சக்கர நாற்காலியில் அமர்ந்து, நகர்ந்து, வெளியில் வந்ததும், பல்லாயிரக்கணக்கான மக்கள் குழுமி, வரவேற்று, மகிழ்ச்சிப் பெருக்கால் மலைப்போல் குவித்தனர் மலர் மாலைகளை, பெரியார் நேரே மத்திய சிறை சென்று, பின்னரே இல்லம் திரும்பினார். அன்று மாலை, யானைமேல் அம்பாரி போல் அலங்கரிக்கப்பட்ட அழகுமிகு தேரில் பெரியார் அமர்த்தப்பட்டு, 4 மைல் நீள ஊர்வலம், எம். ஆர். ராதா தலைமையில் நடைபெற்றது. மாவட்டக் கழகத் தோழர்களான எம்.கே.டி சுப்ரமணியம், எம். எஸ். மணி ஆகியோர் முன்னின்று நடத்தினர், “நான் வெளியே வந்துவிட்டேன். நாலாயிரம் பேரில் இன்னும் 1500 பேர் சிறைச்சாலையில்தான் கொடுமை அனுபவிக்கிறார்கள்” என்றார் பெரியார். ஆறுமாத - ஒய்வுக்கு விடைகொடுத்து, அடுத்த நாளே சுற்றுப்பிராயணம் தொடங்கினார் பெரியார். மே 14 திருச்சி, 15 குடத்தை , 16 தஞ்சை , 17 திருவாரூர், 18 திருச்சி, 19 ஈரோடு, 20 சேலம், 22 மதுரை, 23 விருதுநகர், 24 பெரியகுளம், 25 தேனி, 26 காரைக்கால், 29 சிதம்பரம், ஜுன் 1 சின்ன சேலம், 2 கடலூர், 3 சிதம்பரம், 5-6 மன்னார் குடியில் சாதி ஒழிப்பு, சுதந்திரத் தமிழ்நாடு மாநாடுகள். இங்குதான் பெரியார் அறிவித்தார், “சாதி ஒழிப்புக்கு நாடு பிரிவினையே முன்னணித் திட்டம். தமிழக விடுதலையை வற்புறுத்தத் தமிழ்நாடு நீங்கலாக உள்ள இந்திய யூனியன் படத்தை எரிக்கப்படும்” என்பதை.

17.6.58 ல் சென்னைத் துறைமுகத்தில் நடந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 6 பேர் உயரிழந்தனர். உடனே பகிரங்க விசாரணை நடத்த வேண்டும் என்று கோரப்பட்டது. பழைய நாள் தொழிற்சங்கத் தலைவரும் பெரியாரின் நண்பருமான சர்க்கரைச் செட்டியார் 14.6.58 அன்றும், சிறந்த மருத்துவமேதையும் வள்ளலுமான டாக்டர் குருசாமி முதலியார் 27.6.58 அன்றும், மறைந்தனர். சிறைக்கோட்டதிலிருந்து குத்தூசி குருசாமி, ஏ.பி. சனார்த்தனம், ஆனைமலை நரசிம்மன்