பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

307

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


பெரியாருக்கு அன்பளியுங்கள்| 24.9.58 “கரண்ட்” இதழில் பெரியாரின் கட்டூரையை வெளியிட்டுச் சிறப்பித்தனர். பம்பாயில் மான்கூர்டு பகுதியில் நடைபெற்ற பெரியார் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளில் 3.10.18 அன்று எஸ்.எஸ் மிராஜ்கரும் பிறரும் கலந்து கொண்டு, பெரியாரைப் புகழ்ந்து பாராட்டினார்.

4.10.58 அன்று புஞ்சை சங்கேந்தியில் பெரியார் பேசும் போது கண்ணீர்த்துளிக் கட்சி பற்றிக் குறிப்பிட்டார். “இவர்களால் என்னதான் முயன்றாலும் மந்திரி சபை அமைக்க முடியுமா? அதற்கு வேண்டிய பணம் இவர்களிடம் ஏது? வெறும் அடுக்கு மொழியும் குறும்புப் பேச்சும் இருந்தால் போதுமா?” என வினவினார் பெரியார். 21.10.58ல் திருச்செங்கோட்டில் “சுதந்திரத் தமிழ்நாட்டுக்குள்ளே நேரு வருவதானாலும் பாஸ்போர்ட் பெற்றுத்தான் வர வேண்டும்.” என்று பெரியார் உறுதியுடன் தெரிவித்துத் “தமிழ்நாடு தனியாகப் போனால் என்ன; காக்காயா தூக்கிப் போய்விடும்?” எனவும் கேட்டார். 26ந்தேதி மாயூரம் அடுத்த பெரம்பூர் ஊராட்சி மன்றத்தில் பெரியார், முதலமைச்சர் காமராசரின் படத்தினைத் திறந்து வைத்தார். யூனியன் பட எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட எல்லாரும் குடும்பத்துடன் தயாராயிருங்கள் என்று பெரியார் அங்குக் கேட்டுக் கொண்டார். நவம்பர் 26ம் நாள் அண்ணாமலை நகரில் மாணவத் தோழர்கள் பெரியாருக்கு 21 அடி நீளமுள்ள வெள்ளிவாள் பரிசளித்தனர். அக்டோபர் இறுதியில் சில நாட்கள் உடல் சுரமாக இருந்தும், அதிகம் பேசாமல் தன்னைக் கட்டுபடுத்திக் கொண்டு பெரியார் சுற்றுப்பயணம் தொடர்ந்து நவம்பரிலும் சென்றார். 29,30 இரு நாட்களிலும் பெங்களூரில், அநேக நிகழ்ச்சிகளில், சிறிது நேரம் கன்னட மொழியிலும் பேசினார். எங்கள் மூதாதையர் கன்னட மொழிக்காரர் ஆனாலும், வீட்டு மொழி தமிழ்தான் நான் வாணிப சம்பந்தமாகப் பழகியதில் தெலுங்கும், மலையாளமும் தெரியும்! கன்னடம் அரைகுறை தான் என்றார் பெரியார்.

கடலூர் சி.எஸ். கிருஷ்ணசாமி அவர்கள் மகன் கி. வீரமணி, கோட்டையூர் சிதம்பரம் - ரங்கம்மாள் சிதம்பரம் அவர்கள் மகள் மோகனா ஆகியோர் வாழ்க்கைத் துணை நல விழா 7.12.58 அன்று திருச்சியில் நடைபெறும் எனப் பெரியாரும் மணியம்மையாரும் கையெழுத்திட்டு அழைப்பிதழ் அனுப்பியிருந்தனர். சிறப்போடு நடைபெற்றது அந்தக் குடும்பவிழா. டாக்டர் அ. சிதம்பரநாதன், துணைவியார், மற்றும் இயக்கத் தோழர்கள் எல்லாருமே மகிழ்வோடு கலந்து வாழ்த்தினர். 9 ந் தேதி திருமணம் திருச்சியில் பதிவு செய்யப்பட்டது. 10 ந்தேதி பெரியாரும், மணியம்மையாரும். மணமக்களும் கடலூர் மணமகன் இல்லத்துக்கும், 11 ஆம் நாள் திருவண்ணாமலை மணமகள் இல்லத்துக்கும் சென்று, புது விருந்து அருந்திப் பாராட்டுவிழாவில் பங்கு பெற்றனர்.