பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

308



திராவிட நாடு கேட்டதை மாற்றிக்கொண்டு பெரியார் இப்போது தமிழ்நாடு கேட்பது எப்படி நியாயம் என்ற அய்ய வினா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தரப்பில் சிலரால் எழுப்பப்பட்டபோது பெரியார் திண்டுக்கல்லில் 23.11.58 அன்று பதில் கூறினார். அதாவது “அன்று நாம் கேட்டது சென்னை ராஜதானியை. இன்று நாம் கேட்பது சென்னை ராஜ்யத்தை, வேறுபாடு இல்லை” என்றார் பெரியார். “முன்பு சென்னை ராஜதானி என்பது தமிழ் நாட்டுடன் ஆந்திர, கேரள கர்நாடகப் பகுதிகளும் இணைந்திருந்த பகுதி. இன்று மொழிவார் மாநிலங்கள் அமைக்கப்பட்ட பின்பு, சென்னை ராஜ்யம் என்பது தமிழ்நாடு மட்டுமே. அதனால் நமது கோரிக்கை மாறவில்லை எல்லைதான் சுருக்கப்பட்டுவிட்டது.” என்பது பெரியார் விளக்கம். அதே போன்று பொள்ளாச்சியில் “கண்ணீர்த்துளிகள் 15 பேராயிருப்பவர்கள் 35 பேராக உயர்ந்தால் மட்டும் என்ன சாதிக்க முடியும்? என்றார் 17.12.58 அன்று ஆட்சியைப் பிடிக்க இவர்களால் முடியாது, எதிர்க்கட்சியாயிருக்கும் போது, எண்ணிக்கை உயர்வதால் என்ன லாபம் என்பது கருத்தாகும். காமராசர் இத்தருணத்தில், எஸ்.எஸ்.எல்.சி. வரை இலவசக்கல்வி தருவது என்ற தமது திட்டத்தை அறிவித்தது பெரியாருக்கு இனிப்பான செய்தி, அத்துடன் 300 மக்கள் வாழும் கிராமத்திலும் ஆரம்பப்பள்ளி நிறுவப்படும் என்றும், இலவச மதிய உணவு 2,28,000 பிள்ளைகளுக்கு வழங்கப்படுவதாகவும் வெளியான செய்திகள் பெரியார் உள்ளத்தைக் குளிர்வித்தன. தோழர்களின் அன்புத்தொல்லை தாங்க முடியாமல் “இனிமேல் தான் முன்கூட்டியே ஒத்துக்கொள்ளாத நிகழ்ச்சிகளுக்குத் திடீர் என்று அழைக்காதீர்கள், உயரக் குறைவாக மேடை அமைத்து, உட்கார்ந்து பேசக் கட்டில் போலச் சமன நிலையில் ஆசனமும், மேல் விரிப்போ மெத்தையோ மிருதுவாகப் பரப்பவும் வேண்டும். தங்குவதற்கு, அருகிலுள்ள முசாபரி பங்களா என்னும் பயணியர் விடுதி தேவை" என்ற அறிக்கையினைப் பெரியார் வெளியிடச் செய்தார். டிசம்பர் இறுதியில் பெரியார் நாஞ்சில் நாடு சுற்றுப்பயணத்திலிருந்த போது, சென்னையில் அகில இந்தியப் பகுத்தறிவாளர் மாநாட்டுக்குச் செய்தி அனுப்பியிருந்தார். அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தின் 12 ஆவது பலியாக, வாளாடி பெரியசாமி என்ற 15 வயதுச் சிறுவன் மாண்டபோது, 29.12.58 அன்று பெரியார் மிக்க வேதனையோடு எழுதியிருந்தார்,

1959 ஜனவரி 10,11 நாட்களில் பெரியார் பெங்களூர் சென்றிருந்தார். அங்கே அகில இந்திய ஆட்சிமொழி மாநாடு 11.1.59ல் நடந்தது. ஜெனரல் கரியப்பா, நீதிபதி மேடப்பா போன்றோர் கலந்து கொண்டனர். பெரியார் சிறப்புரையாற்றுகையில் “இந்த மாநாட்டில், வேண்டுகோள் தீர்மானங்களே நிறைவேற்ற வேண்டாம். இனி நேரடி நடவடிக்கைதான் தேவை. இந்தி எப்போதுமே வேண்டாம்! இங்கிலீஷே நீடிக்க திட்டம் வேண்டும்” என்றார்.