பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

310


செய்துகொள்ளாமல், முழுநேரப் பணிக்கு அர்ப்பணித்துக் கொண்டவர், நிழல் போல் பெரியாரைத் தொடர்ந்தவர், அவருக்குப் பின்னரும் இயக்க இணைப்பைக் கைவிடாதுள்ளவர். இன்று திருச்சியிலுள்ள பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனக் கல்விச்சாலைகள் அனைத்துக்கும் தாளாளர்.

அரசியல் சட்ட எரிப்புப் போரின் 13 வது பலியாக கண்டராதித்தம் சிங்காரவேலு மார்ச் 23ல் 14 வது பலியாக சென்னை கந்தசாமி மார்ச் 21 ல், 15 வது பலியாக திருச்சி டி.ஆர்.எஸ் வாசன் ஏப்ரல் 25 ல் மரணமடைந்தனர். சேலத்தில் நீண்ட நாளையக் கழக அன்பர் கே. ஜெகதீசன் 20.3.59 அன்று இயற்கை எய்தினார். எல்லாத் துயரங்களையும் பெரியார் தாங்கிக் கொண்டார். திருச்சி சிறைச்சாலையில் இன்னும் தண்டனை அனுபவித்து வந்த தொண்டர்களை 17.3.59 அன்று பேட்டி கண்டார். 20 ம் நாள் சிறை சென்று திரும்பிய தோழர்களைப் பாராட்டிப் பெரம்பலூரில் சான்றிதழ் வழங்கினார். 28ம் நாள் சீர்காழியில் 9 மாதச் சிறைத் தண்டனை பெற்று. விடுதலையான சில நாளில் மறைந்து போன, தொண்டர் ஸ்டாலின் இல்லம் சென்று, அவர் தந்தையார்பால் துக்கம் விசாரித்தார். சீர்காழியில் பேசும்போது ஆத்மா, மோட்சம், நரகம் இவை பற்றிய தெளிவான, விஞ்ஞானப் பூர்வமான விளக்கங்களைத் தெரிவித்து, இவற்றில் பார்ப்பனர் புகுந்து, எப்படித் தங்களுக்கு வருமானத்தையும், நமக்கு அறிவீனத்தையும் தேடுகிறார்கள் எனவும் விரிந்துரைத்தார் பெரியார்.

21ம் நாள் தஞ்சையிலும், 27 ம் நாள் திருச்சியிலும் நடைபெற்ற வரவேற்புப் பொதுக் கூட்டங்களில் “தமிழனின் நல்லாட்சியைக் கவிழ்க்க முயல்கிறார்கள்; விடக்கூடாது! காமராசர் ஆட்சியைப் பலப்படுத்த, நகரசபைத் தேர்தல்களிலும் ஆளுங்கட்சிக்கே ஆதரவு காட்ட வேண்டும்” என்று பெரியார் பேசிவந்தார். ஆனால் சென்னை மாநகராட்சியை முதன்முறையாகத் திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றியது, 1959-ல்! நேருவுக்குக் கருப்புக்கொடி பிடித்தபோது, போலீசாரின் தடியடிக்கு ஆளாகிச் சாலையில் உருண்டு கிடந்த அ.பொ. அரசு, சென்னையில் முதல் தி.மு.க. மேயராகவும், தாழ்த்தப்பட்ட தோழரான அ. சிவசங்கரன் முதல் தி.மு.க. துணை மேயராகவும் வெற்றி கொண்டனர். மொத்தம் 53 நகராட்சி மன்றங்களின் தேர்தல்களில் 34 ஊர்களில் காங்கிரஸ் தோற்றது. 22-4-59-ல் பெரியார், அரவக்குறிச்சி உயர்நிலைப் பள்ளியில் சிந்தனையைத் தூண்டும் கருத்துச் சுரங்கமான பகுத்தறிவுப் புதையலைச் சொற்பொழிவாக்கினார். உலகிலுள்ள 250 கோடி மக்களில் 150 கோடி மக்களுக்குக் கடவுள் இல்லையே, அவர்கள் என்ன கெட்டுவிட்டார்கள்? என்று கேட்டார் பெரியார்.