பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

311

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



ஏப்ரல் 28, 29, 30 ஆகிய நாட்களில் பெரியார் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தார். காந்தியார் பார்ப்பனரல்லாத மக்களுக்குப் பெருத்த துரோகமும், தீங்கும் இழைத்துச் சென்றுவிட்டார் என்ற உண்மைகளை விதந்துரைத்தார். கம்யூனிஸ்டுகளோ, கண்ணீர்த்துளிகளோ சாதியை ஒழிக்க முன்வர மாட்டார்கள் என்றார். அதற்கு எடுத்துக்காட்டாகப் பெரியாரிடம் சரியான இரண்டு சான்றுகள் சிக்கிக்கொண்டன. 1957 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் வாக்காளர் பட்டியலில் ஏற்பட்டிருந்த இரு தவறுகள், பெரியாரின் வாதத்துக்கு அணி செய்தன. அவையாவன:- கம்யூனிஸ்ட் தலைவர் மணலி கந்தசாமியின் பெயர் வாக்காளர் பட்டியலில் சி. கந்தசாமித் தேவர் என்றும், அண்ணாவின் பெயர் சி.என். அண்ணாத்துரை முதலியார் என்றும் அச்சாகிவிட்டதால், மாற்றுவதற்கு நேரமின்றி, அவர்கள் இந்தப் பெயருடனேயே தேர்தலில் போட்டியிட நேரிட்டது. “இவர்களா சாதியை ஒழிப்பார்கள்?” என்று கேட்டார் பெரியார்!

மே மாதச் சுற்றுப்பயணத்தில், குறிப்பிடத்தக்க இதர நிகழ்ச்சிகள், பெரியார் 17-ந் தேதி கர்நாடக மாநிலம் மங்களூரில், அம்பேத்கர் சமரத் சமிதி எனும் நினைவு மன்றத்தில் கன்னட மொழியில் பேசியது; 21-ந் தேதி சென்னையில் புத்தரின் 2503-ஆவது ஆண்டு விழா ஊர்வலத்தில் தலைமை ஏற்றது! 25-5-59 “விடுதலை” ஏட்டில் பெரியார் மூன்று முட்டுக்கட்டைகள் என்ற தலையங்கத்தில், நாம் முன்னேற முடியாமல் போனதற்கு - முன்னோர்கள் சொன்னபடி கேட்பதும், எழுதியபடி நடப்பதும், நடந்தபடிப் பின்பற்றுவதும்தான் காரணம் - என்று முடித்திருந்த பாங்கு பாராட்டத்தக்கதாகும்.

24-5-59-ல் சேத்தியா தோப்பில் பேசும்போது, ஜெயில் வாசம் என்ற பெயரில் ஆஸ்பத்திரியில், அரசு செலவில் தங்கி, உடல் நலம் பெற்று, ஓராண்டாய்த் தொந்தரவில்லாமல் பணியாற்ற முடிவதாகப் பெரியார் பெருமைப்பட்டுக் கொண்டார். தாம் செத்திருந்தால் அதைச்சொல்லியே கண்ணீர்த்துளிகள் அசெம்பிளியில் 100 இடம் பிடித்திருப்பார்கள்; உயிரோடிருப்பதால் இந்த மந்திரிசபையையே காப்பாற்ற முடிகிறதே என்று பெரியார் குறிப்பிட்டார்.

மே திங்கள் 4-ம் நாள் சிங்கப்பூர் சுதந்திர நாடாயிற்று. 11-ம் நாள் ராஜாஜியின் சுதந்திரக் கட்சி பற்றிப் பெரியார் கண்டித்திருந்தார். 23-5-1959-ல் திருச்சி வானொலி நிலையத்தில் ஆகாஷ்வாணி போராட்டத்தில் கி.ஆ.பெ. விசுவநாதம் கைதாயினார். இந்தப் போராட்டத்தைத் தாம் ஆதரிப்பதாகப் பெரியார் கூறியிருந்தார். 21-ம் நாள் திருச்சி சோதிபுரத்தில் பெரியாருக்கு வெள்ளிச் செங்கோல் வழங்கினார்கள். இந்தக் கூட்டத்துக்கு வருவதற்காகத் தஞ்சை மாவட்டத்திலிருந்து நள்ளிரவில் காரில் பிரயாணம் செய்த போது,