பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

313

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி, வெள்ளக் கோயிலில், பெரியார் முன்னிலையில், மீண்டும் திராவிடர் கழகத்துடன் அய்க்கியமானார். திருவாரூரில் தண்டவாளம் ரங்கராசு எனப்படும் வீரமிக்க திராவிடர் கழக உழைப்பாளர் 23-11-59 அன்று இயற்கை எய்தினார். திரையுலகில் ஒரு காலத்தில் புகழ்க்கொடி பறக்கவிட்ட எம்.கே. தியாகராஜ பாகவதர் 1-11-59 அன்று மறைந்தார். நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் 16-12-59-ல் காலமானார். 20-12-59 அன்று வேதாரணியம் சென்றிருந்த பெரியாரை, சர்தார் வேதரத்தினம்பிள்ளை எம்.எல்.ஏ. வரவேற்றுப் பாராட்டிப் போற்றிப் புகழ்ந்து, தம் கன்னியா குருகுலத்தைச் சுற்றிக் காட்டினார். பெரியார் வாழ்க்கையில் முதல் தவறு என்று அவரே குறிப்பிட்ட நிகழ்ச்சி ஒன்று 29-11-59 அன்று நடந்துவிட்டது! 28-ஆம் நாள் பெரியார் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டுத், தமது காரில் காஞ்சிபுரம் புறப்பட்டார். காஞ்சியில் மாபெரும் நிதியளிப்புப் பொதுக்கூட்டம். வழியில் பலத்த மழை. கார் பழுதாகி நகர மறுக்கிறது. எவ்வளவு முயன்றாலும் காஞ்சிக் கூட்டத்துக்குப் போய்ச்சேர வழியில்லை. வேறு நிலைமை சரியாகத் தோன்றாததால் பெரியார், கிடைத்த பேருந்து ஒன்றைப் பிடித்து, எப்படியோ திருச்சி போய்ச் சேர்ந்தார். இப்படி, ஒத்துக்கொண்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்குப் போய்ச் சேர முடியாமல் போனதையே, பெரியார், முதல் தவறு என்று “விடுதலை”யில் குறிப்பிட்டு, வருத்தமும் தெரிவித்து, மறு திங்களில் வேறு நாளில் காஞ்சி சென்று, அக்குறையை நிறைவு செய்துவிட்டார்.

1960 சனவரித் திங்களிலும் நாடெங்கும் நிதியளிப்புக் கூட்டங்களில் பெரியார் பெரிதும் கலந்து கொண்டார். சனவரி 16-ஆம் நாள் தஞ்சை மாவட்டத்தில் பேசும் போது, “தஞ்சை மாவட்டம் புத்தரின் அறிவொளி பரவிய மய்யம் ஆயிற்றே; புத்தக் கொள்கைகளை ஒழித்து இவ்வளவு கோயில்களை இங்கு எழுப்பிவிட்டார்களே; இங்குள்ள பணக்கார மடையரும் பார்ப்பான் காலைக் கழுவித் தீர்த்தமென்று குடிக்கின்றார்களே” என்று பெரியார் வேதனைப் பட்டார். கும்பகோணத்தில் 30-ம் நாள், பொதுக் கூட்டத்தில் பேசும்போது. பார்ப்பனர் நிலை மேலும் சரியாமல் முட்டுக்கொடுத்துக் காப்பாற்றத் தான் ஆச்சாரியார் இப்போது சுதந்திரக் கட்சியைத் தோற்றுவித்திருக்கிறார் என்பதைச் சுட்டிக் காட்டினார் பெரியார். தூத்துக்குடி இடைத் தேர்தலில் காமராசரின் கட்சியையே ஆதரிக்கவேண்டும் என்று நாட்டு மக்களைப் பெரியார் கேட்டுக்கொண்டார்.

பிப்ரவரி முதல் நாள் திருச்சியில் எம்.ஆர். ராதாவின் மகன் வாசுதேவனுக்கும் லலிதகுமாரிக்கும் திருமணம். அழைப்பாளராகப் பெரியார் பெயர் போடப்பட்டிருந்தது. இந்த மாதம் முழுவதும் பெரியாருக்குச் சுற்றுப் பயணம் இருந்தது. நிகழ்ச்சிகளுக்கு நிறைய