பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

314


அழைப்புகள் வந்து கொண்டிருந்ததால் பெரியார் சில கட்டுப்பாடுகள் வரையறைகள் விதித்து 10-2-60 அன்று ஓர் அறிக்கை “விடுதலை”யில் வெளியிட்டிருந்தார். தோழர்களுக்கு வணக்கமான விண்ணப்பம் என்பது தலைப்பு: தன்னுடைய கார் ஒரு காலன் பெட்ரோலுக்கு சராசரியாக 11 மைல்தான் செல்கிறது என்பதைப் பொருளாதார அடிப்படையில் காண்பித்திருந்தார். உடல் நிலையை நினைவுபடுத்திக் கூட்டம் நடக்கும் ஊர்களிலோ, அருகிலோ உள்ள டி.பி. எனப்படும் பயணிகள் விடுதியில் தங்குவதற்கு ஏற்பாடும், தன்னிடமுள்ள சமையல் பொருள்களின் உதவி கொண்டு தனக்காகப் பத்தியமான சமையல் சாப்பாடு முதலியவை தயாரித்துக் கொள்வதற்கு அனுமதிக்குமாறும் கேட்டிருந்தார். வெளியில் தோழர்கள் வீடுகளில் சாப்பிடக் கூப்பிட வேண்டாம். அப்படி வந்துதான் தீர வேண்டுமென்றால் அதற்குக் கட்டணம் ரூ.10; புகைப்படம் பெரியாருடன் சேர்த்து எடுத்துக்கொள்ள விரும்பினால் ஒரு (அமைப்பு) Sitting -க்கு ரூ.5. கழகப் பொதுக்கூட்டங்களுக்கானால் ரூ.75. திருமணம் ஆண்டுவிழா நீத்தார் நினைவு போன்ற நிகழ்ச்சிகளுக்கு ரூ.150. அழைக்க வரும்போதே முதலில் தந்துவிடவேண்டும். சென்ற பிறகு சில இடங்களில் செலவுக்கான வழிச் செலவுத் தொகையைச் சரியாகத் தருவதில்லை என வருத்தப்பட்டிருந்தார்.

சென்னை சட்டக்கல்லூரித் தமிழ்ப் பேரவையில் பெரியார் 10-2-60 அன்று உரையாற்றினார், சட்டக்கல்வி இயக்குநர் நீதிபதி ஏ. எஸ்.பி. அய்யர் தலைமை ஏற்றிருந்தார். தமிழ் இலக்கியங்கள் தமிழனைக் காட்டுமிராண்டி நிலையிலேயே வீழ்த்தியுள்ளன. காரணம் அந்த இலக்கியங்களில் உள்ள கடவுள் மதப் பிணைப்புகளே ஆகும் என்னும் கருத்துப்படப் பெரியார் விரிவுரையாற்றினார். தமிழ்ச் சான்றோரும் பெரியாரின் நண்பருமான அ. சக்கரவர்த்தி நயினார் 13-2-60 அன்று மறைந்த போது சவ ஊர்வலத்தில் பெரியாரும் சிறிது தொலைவு நடந்து சென்றார். விருதுநகர் செந்தில்குமார நாடார் கல்லூரியிலும் பெரியார் உரை நிகழ்த்தினார். பெங்களூரில் மீண்டும் ரூ.3010 கட்டட நிதியாகப் பெரியாரிடம் 2-12-60 அன்று வழங்கினார்கள். திருச்சி, பெரியார் ஆசிரியப் - பயிற்சிப் பள்ளியில் கண்காட்சி பற்றிப் பெரியார் விளக்கினார்:- “இது அறிவுக்கு விருந்தே தவிரக் கண்ணுக்கு அழகு என்பது தவறு. மேல்நாடுகளில் அறிவு வளர்ச்சிக்காக ஆண்டு முழுவதும் காட்சிகளை நடத்துகிறார்கள். ஓர் இரயில் பெட்டி செய்யும் கண்காட்சி என்றால் முதலில் இரும்பு, மரம் இவை குவியலாய்க் கிடப்பதில் தொடங்கிப், பின், வரிசைக் கிரமமாய் அவை உருக்கப்பட்டு ஆணியாகித் தகடாகி, மரம் அறுக்கப்பட்டுக் கட்டையாகிப் பலகையாகி, இறுதியில் பெட்டியாக முழுமையடையும் வரையில் காண்பிக்கிறார்கள். பார்ப்பவர்களும் நேரடியாகக்