பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

315

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


கண்டு அறிவைப் பெருக்கிக் கொள்கிறார்கள். இங்கு இன்னமும் பெண்களுக்கான ரிப்பனும் வளையலுந்தானே வைக்கிறோம்” என்றார் பெரியார்.

“சமஸ்கிருதம் எனும் செத்தமொழியை உலகமெலாம் பரப்பவும், இந்தியாவில் அரசாங்க ஆதரவுடன் மரியாதை உண்டாக்கவும் அடிக்கடி பார்ப்பனர்கள் முயன்று வருகிறார்கள். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியரான கா. நமச்சிவாய முதலியாருக்குச் சம்பளம் 81 ரூபாயாயிருக்க, சமஸ்கிருத ஆசிரியரான சாஸ்திரிக்குச் சம்பளம் 350 ரூபாய். சமஸ்கிருதத்துக்குச் செல்வாக்கு குறைவதைக் கண்டுதானே 1947-ல் ஆச்சாரியார் இந்தியைப் புகுத்தி அதன் சரிவைத் தடுக்க முயன்றார். இன்று சமஸ்கிருதம் எதற்குத் தேவை?” என்று கேட்டார் பெரியார்,

அத்துடனல்லாமல் தமிழ் விஞ்ஞான ரீதியாக வளர்ச்சியடையாமலிருப்பதையும் சுட்டிக் காட்டினார். தமிழ் தாய்ப்பால் என்றும் இங்கிலீஷ் புட்டிப்பால் என்றும் கூறுகிறார்கள். தாய்ப்பால் நல்லதுதான். ஆனால் தாயே நோயாளியாகவும், சத்தற்றவளாகவும் இருக்கும்போது தாய்ப்பால் குடிக்கும் பிள்ளை உருப்படமுடியுமா? தாய்க்கு நல்ல சத்துணவு இருந்தால்தானே அவளுக்குப் பாலும் ஊறும்; அந்தப் பாலுக்குச் சக்தி இருக்கும்? தமிழில் நல்ல உணவு எங்கேயிருக்கிறது? அய்ம்பெருங்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, இராமாயணம், பாரதம், கந்தபுராணம், பெரியபுராணம் இவைதாமே தமிழ்த்தாய் உண்ட உணவுகள்? இவைகளில் சுவை இருக்கலாம். அழகு இருக்கலாம். முன்னேற்றத்துக்கான அறிவு இருக்கிறதா? மொழி என்பது ஒருவர் கருத்தை இன்னொருவர் அறியப் பயன்படுத்துவது தானே? இதிலே கொண்டு போய்த் தாய்மொழி தகப்பன் மொழி நாட்டுமொழி முன்னோர் மொழி என்று எதற்காகப் பொருத்துவது? நாம் தாய்மொழி தாய்மொழி என்கிறோம். பார்ப்பானுக்கு எது தாய் மொழி? ஏது தாய் மொழி? அவன் இங்கிலீஷைப் படித்து மேலே போகிறான். நாம் சாம்பிராணிகளாகிறோம் - என்றார் பெரியார். தொல்காப்பியம் இயற்றப்பட்ட காலத்திலேயே பார்ப்பனக் கருத்துகள் புகுந்துவிட்டன என்பதையெல்லாம் தக்க ஆதாரங்களுடன் பெரியார் எடுத்துக்காட்டினார்.

கட்டட நிதி அதிகரித்துக்கொண்டே வந்து 1-3-60 வரையில் 1,34,213 ரூபாயாக உயர்ந்திருந்தது. மார்ச் மாதம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பெரியார், தம்மை நாடகம் முதலியவைகளுக்கு அழைக்க வேண்டாமென்றும் தம்மால் கண்விழிக்க இயலவில்லை என்றும் அறிவித்தார். தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் தீவிரப் பிரயாணம் செய்து வந்தார். நாகரசம்பட்டியில் ராஜா சுப்ரமணியம் 35 ஆண்டுகளாகப் பஞ்சாயத்துத் தலைவராக வீற்றிருப்பதைப் பாராட்டி,