பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

317

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


புறக்கணித்து. இந்திதான் ஆட்சி மொழி என்று கூறிவிட்டது. நேருவின் உறுதி மொழிகள் அச்சாகி, மைஉலரும் முன்பே வேகவேகமாக வேறொரு புறத்திலிருந்து ஆணைகள் பிறப்பிக்கப்படுவதும் இந்தி பல இடங்களில் திணிக்கப்படுவதும் நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது. இந்தியை எதிர்த்து நான் இந்திய யூனியன் கொடியைக் கொளுத்துவதைக்கூட, ஒத்தித்தான் வைத்தேன். இவர்கள் நாணயம் எனக்குத் தெரியும். வாக்குறுதியைப் பறக்க விடுவார்கள் என்றுதான் கொடி கொளுத்தும் கிளர்ச்சியை இன்னும் கைவிட்டு விடவில்லை. ஆனால் அதற்குள் சாமர்த்தியமாய் இங்குள்ள சட்டசபையைக் கொண்டு, கொடி கொளுத்தினால் மூன்றாண்டு தண்டனை எனச் சட்டம் போடச் செய்தார்கள். நண்பர் ஆச்சாரியார் கூட இரண்டாண்டுகாலமாய் இந்தித் திணிப்பு இந்திய அய்க்கியத்தைக் குலைக்கும் என்கிறார். அதன் அர்த்தம் - இந்தியை ஒழிக்க முடியாவிட்டால் நாம் தனியாகப் பிரிந்து கொள்ளலாம் என்பதுதானே? ஆகவே இந்தியெனும் விஷ விருட்சத்தின் ஆணிவேரைக் கில்லி எறிய ஒரே வழிதான் உண்டு. அது நாட்டுப் பிரிவினை. இதற்காகவாவது இந்தியத் தேசப்படத்திற்குத் தீ வையுங்கள்!

தமிழ்நாடு எதற்காக இந்திய யூனியன் ஆட்சியின்கீழ் இருக்க வேண்டும்? டெல்லி ஆட்சி அப்படி என்ன நீதிக்கும் நிர்வாகத் திறமைக்கும் நேர்மைக்கும் ஜனநாயகத்திற்கும் பாதுகாப்பிற்கும் பலத்திற்கும் சிறப்பான பேர்போன ஆட்சி வரலாற்றுப்படியோ, பூகோளப்படியோ, புராணப்படியோ, கலாச்சாரப்படியோ நமக்கும் டெல்லிக்கும் சம்பந்தமேயில்லை. ஏக இந்தியத் தோழர்களே! சிந்தியுங்கள் தெளிவடையுங்கள். வேறுவழி உண்டானால் சொல்லுங்கள்; வேறு மார்க்கம் இருந்தால் காட்டுங்கள். இல்லையென்றால் என் வழிக்கு வாருங்கள். பந்தத்தை ஏந்துங்கள். படத்தைப் பொசுக்குங்கள்."

மே மாதம் முழுவதும் தமிழகம் பெரியாரின் இந்த வீரமுழக்கத்தால் எதிரொலித்துக் கிடந்தது. சிகரம் வைத்தது போல் 4-6-60 நாள் சென்னை திருவல்லிக்கேணிக் கடற்கரையில் டி.எம். சண்முகம் தலைமையில் மிகப் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடந்தது. பெரியாரும் வீரமணியும் தவிர, நாம் தமிழர் இயக்கத்துச் சார்பில் ஆதித்தனார், ஈரோடு சின்னசாமி, வரதராஜன், ஜெயச்சந்திரன் ஆகியோரும் பேசினார்கள். 2 லட்சம் படங்கள் கொளுத்துவதற்காக வழங்கப்பட்டிருந்தன. இது பட எரிப்பு அல்ல; படையெடுப்பு என 3-6-60 “விடுதலை” வர்ணித்தது. ஜூன் முதல் நாள் அமைச்சரவை கூடிற்று. சென்னையில் 41-ஆவது பிரிவின்கீழ் ஜூன் 4 முதல் 11 வரை தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஜூன் 5 காலை 10.30 மணியளவில் 151-ஆவது தடுப்புக்காவல் சட்டத்தின்படிப் பெரியாரும், வீரமணி, குருசாமி, புலவர் கோ. இமயவரம்பன் ஆகியோரும்,