பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

319

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


கட்டாயமாகத் திணிக்கப்பட மாட்டாது என்று அழுத்தமாகத் தெரிவித்தார். திராவிட முன்னேற்றக் கழகம் கருப்புக்கொடி காட்டவில்லை ; எனினும், நாம் தமிழர் இயக்கத் தலைவர் உட்பட 100 பேர் ஜனாதிபதிக்குக் கருப்புக் கொடி காட்டிக் கைதாயினர்.

16 வயதும், 17 வயதும் ஆகியிருந்த இரு இளம்பட எரிப்பு வீரர்களுக்குத் திருச்சியில் 11-8-60 அன்று இரண்டாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. “தமிழகத்தில் தமிழும், மத்தியில் இங்கிலீஷும் ஆட்சி மொழிகளாக இருக்கும். இதை நாம் உறுதியாகக் கூறிவிட்டோம். அவர்களும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.” என்று முதலமைச்சர் காமராசர் 1960 ஆகஸ்டு 14-ஆம் நாள் தெளிவாய்ச் சொன்னார்.

‘அசல் ஒண்ணாம் நெம்பர் காலித்தனம்’ என்று 25-8-60 “விடுதலை” தலையங்கம் தொடங்குகிறது. இதன் தலைப்பு “ஸ்ட்ரைக் - வேலை நிறுத்தம்” இதை எழுதியவர் பெரியார்தாம்! அழகிரிசாமி அரசாங்க வக்கீலாக நியமிக்கப்பட்டது செல்லாது என்று சில பார்ப்பனர்கள் தடையுத்தரவு கோரித் தொடுத்த வழக்கு, அவர்களுக்குத் தோல்வியானது. இந்தப் பார்ப்பனர் போரைக் கண்டித்துப் பெரியார் 30-8-60 அன்று தலையங்கம் தீட்டியிருந்தார். பின்னாளில் அழகிரிசாமி, உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் நீதிபதி! 9-9-60 அன்று “இராவணன் பிறந்த நாள்” என்று “விடுதலை”யில் தலையங்கம் - வெளியாயிற்று. யார் அந்த இராவணன்? வேறு யாருமல்ல; பெரியாரைத்தான் வடநாட்டில் “தட்சிணப் பிரதேஷ் ராவண்" என்கிறார்களாம். அன்பினாலோ வம்பினாலோ உண்மையைக் கூறிவிட்டார்களே

செப்டம்பர் 17-ஆம் நாள் பெரியார் 82-வது பிறந்த நாள் விழா: சிதம்பரத்தில் அதே நாளில் டாக்டர் ஆர்.ஜி. கிருஷ்ணன் தலைமையில் வழக்கறிஞர் ரங்கசாமி முதலியோர் பங்கேற்றனர். திருச்சியில் அடுத்த நாள் டாக்டர் மணவாளராமானுஜம் தலைமையில் டி.ஏ.வி. நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இரு ஊர்களிலும் பெரியாரும் பங்கேற்றார். 17-9-60 தஞ்சையில் பெரியார் படத்திறப்பு விழாவில் எம்.ஆர். ராதாவுடன் ஆர்.எஸ். மலையப்பன் (ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்.) பங்கு பெற்றார். 29-9-60 மணப்பாறையில் பெரியார், கலைவாணர் படிப்பகத்தைத் திறந்து வைத்தார். 25-9-60 ஈரோட்டில் எம்.ஜி. அங்கப்ப செட்டியார் தலைமையில் பெரியாரின் எடைக்குச் சரியாகப் பேரீச்சம்பழம் வழங்கப்பட்டது. 30-9-60 சேலத்தில் பி. ரத்தினசாமிப்பிள்ளை தலைமையில் பெரியாரைத் தராசிலிட்டுச் சமஎடைக்குக் கைத்தறி ஆடைகளை வழங்கினார்கள். 28-10-60 மாயூரத்தில் 2 பொற்காசுகளாலான தங்க மாலை பரிசளித்தார்கள்.