பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

320



சிறப்பான ஒரு கூட்டத்தைச் சென்னை நகர மக்கள் சார்பில் திருச்செங்கோடு கே. பரமசிவம் நடத்திக் காட்டினார். 20-10-1966 அன்று சென்னை கோகலே ஹாலில் பெரியாரின் 82-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம். நிகழ்ச்சியின் தலைவர் செட்டி நாட்டரசர். சிறப்புரையாற்றியவர்கள் டாக்டர் எஸ்.ஜி. மணவாள ராமானுஜம், வி.ஆர். ராஜரத்னம் (ஓய்வு பெற்ற அய்.ஜி.) சி.பா. ஆதித்தனார், பி. பரமேசுவரன் எம்.பி., டி.ஏ.வி. நாதன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி எம்.எல்.ஏ., எம்.எஸ். அப்துல் மஜீத், புத்த பிக்கு நந்தீசுவரதேரோ, தமிழ்வாணன், அகல்யா சந்தானம். பேருரை நிகழ்த்தியவர் சக்கரவர்த்தி ராசகோபாலாச்சாரியார். பெரியாரும் இந்த விழாவில் கலந்து கொள்வாரென நம்பி அவரும் வந்தாராம். வராததால் ஏமாற்றமடைந்தாராம். நீண்ட நேரம் ராஜாஜி மனம்விட்டுப் பேசினார்:

“பெரியாரை 1939-ல் பெல்லாரி சிறையில் போட்டு வாட்டினேன் என்றார்கள். சென்னையிலிருந்து பெல்லாரிக்கு ஒரு டாக்டரையும் அனுப்பிக் கவனிக்கச் செய்தேன் என்பது உங்களில் பலருக்குத் தெரியாது. திருவண்ணாமலையில் 1919-ல் என்னைச் சந்திக்க வந்த பின்னர்தான் அவர் திருமணம் செய்து கொண்டதாகக் கூறுகிறார்கள். உண்மையில் எனக்கு அதைப்பற்றித் தெரியாது; 1953-ல்தான் நான் அந்த அம்மாளைப் பார்த்தேன். பெரியார் வீட்டில் நான் முன்பு பல நாள் சாப்பிட்டிருக்கிறேன். தோசையை எப்படி இவ்வளவு வெண்மையாகச் சுடுகிறீர்கள்? என்று நாயக்கரின் தாயாரை விசாரித்தேன். வெந்தயம் போட்டு அரைக்க வேண்டும் என்றார்கள். அப்போதுதான் அதைத் தெரிந்து கொண்டேன்” என்று ராஜாஜி தமக்கும் பெரியாருக்கும் இடையே இருந்த நீண்டகால நட்பை நினைவு கூர்ந்தார். “அடுத்த முறை பிறந்த நாளில் அவரை அவசியம் வரச்செய்து என்னையும் பேச அழைப்பதாகச் சொல்கிறார்கள். இது அவ்வளவு சரியல்ல. இன்றே அவரை அழைத்திருக்க வேண்டும்” என்றார்.

17-10-60 அன்று “விடுதலை”க்குத் தொலைபேசி மூலம் பெரியாரின் அறிக்கை ஒன்று தரப்படுகிறது. என்ன அது? 23-10-60 அன்று திருச்சியில் “ஹைக்கோர்ட் நீதிப்போக்கிற்குக் கண்டன நாள்” என்பதாக, அதேபோலக் கொட்டும் மழையிலும் 10,000 பேர் நிறைந்திருக்க, அந்தக் கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது:- “சென்னை அய்க்கோர்ட்டின் நீதிப் போக்கை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிப்பதோடு, பார்ப்பன வக்கீல்களின் ஆத்திர மூட்டத் தகுந்த, நேர்மைக்கும் மனிதத் தன்மைக்கும் கேடான போக்கை, இக்கூட்டம் வெறுப்பதோடு, இந்நிலை மாறாதிருக்குமானால், பார்ப்பன வக்கீல்கள் பெருங்கேடுகளைச் சமாளிக்க