பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

321

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


வேண்டியிருக்குமென எச்சரிக்கை செய்கிறது” - இதே காரியத்துக்காகப் பெரியார் அக்டோபர் 30-ஆம் நாள் சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையிலும், நவம்பர் 5-ஆம் நாள் கும்பகோணத்திலும் கண்டனக் கூட்டங்களில் பேசினார்.

கட்டட நிதி வசூலுக்காக ரசீது புத்தகம் பெற்றுச் சென்ற தோழர்கள் சிலர், ஒழுங்காகப் பணத்தையும் கணக்கையும் தரவில்லை என்பதைக் கண்டித்துப் பெரியார் 12-11-60 அன்று ஓர் குறிப்புப் பிரசுரித்தார். திருவையாறு சப்ஜெயிலில் இருந்த குருசாமியை, அனுமதி பெற்றுப், பெரியார் சந்தித்தார். அவர் உடல் நலிவுற்றதால், அவர் சொந்த ஜாமீனில் வெளி வரவும் பெரியார் இசைந்தார். அதன்படி குருசாமி 8-12-60 அன்று வெளியில் வந்தார். வழக்கு நடைபெற்று வந்தது. வீர.கே. சின்னப்பன் திருமணத்தில் பெரியார் 27-11-60 அன்று வாழ்த்துரை வழங்கினார். திருச்சி நகர சபையில் பெரியாருக்கு வரவேற்பளிக்கப்பட்டது, 13-11-60 அன்று. அங்கு காமராசர் படத்தைப் பெரியார் திறந்து வைத்தார். செயற்கரிய செய்யும் கர்மவீரர் என்றும் மனிதருள் மாணிக்கம் என்றும் 26,000 பள்ளிகள், 304 உயர்நிலைப் பள்ளிகள், 57 கல்லூரிகளை நிறுவியவர் என்றும் காமராசரைப் புகழ்ந்தார் பெரியார். பின்னர் இது ஒரு தொடர் நிகழ்ச்சியாகிவிட்டது. கரூர், புதுக்கோட்டை நகராட்சிகளிலும் காமராசர் படத்தைப் பெரியாரே திறந்து வைக்க அழைக்கப்பெற்றார்.

பெரியாருடைய கருத்துகளைத் தாம் மெத்தவும் ஆதரிப்பதாகச் சென்னைப் பத்திரிகையாளர்களிடையே 30-12-60 அன்று ஜெயப்பிரகாச நாராயணன் மகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். சென்னையில் இந்தியத் தலைமை நீதிபதி பி.பி. சின்ஹா, வழக்கறிஞர்கள் சாதி உணர்ச்சியுடன் நடந்ததைக் கண்டித்து உரையாற்றினார்.

“நான் ஒரு அதிசயமான மனிதன் அல்லன். ஆனால் துணிவு உடையவன். கண்டதை ஆராய்ந்து, அறிந்ததைத் துணிந்து அப்படியே கூறுபவன். மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சாது கூறுவதால் வெறுப்புதான் கிடைக்கிறது. இந்த நாட்டில் இன்று பார்ப்பன சாதி சூத்திர சாதி என்ற இரண்டே சாதிகளில் எல்லாம் அடங்கிவிடுகின்றனர். இந்த சமூகக் குறையையும், வாழ்க்கை முறையையும், சரிநிலை, சரிபங்கு அடைய முடியாத தடைகளையும் ஒழிப்பதன் மூலமே சாதிக் கேட்டை ஒரு பெரும் அளவு ஒழிக்க முடியும். இதற்கு அரசு மூலமாக நடைபெற வேண்டிய காரியங்கள் இரண்டே இரண்டுதான் உண்டு. ஒன்று, இரண்டு சாதி மக்களுக்கும் சரி சமத்துவ விகிதத்தில் எல்லாப் படிப்பும் கிடைக்கும்படிச் செய்தல்; இரண்டு, இரண்டு சாதி மக்களுக்கும் உத்தியோகம் பதவி ஆட்சித் தலைமை ஆகியவற்றில் ஜனத்தொகை எண்ணிக்கைக்கேற்ற விகிதப்படி, சாதிவாரி உரிமையளித்து அந்தப்படி அந்தந்தச் சாதியை அமர்த்துதல். இந்த இரண்டு காரியமும்