பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

323

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


அவரைச் சந்தித்துப் பேசப் போவதாக அறிவித்தார். நாகர்களுக்குத் தனிநாடு வழங்கப்பட்டது. இந்தியக் குடி அரசுத் தலைவர் 15-2-61 முதல் அது அமுலுக்கு வருமென்று அறிவித்தார்.

திருச்சி என். செல்வேந்திரன் வணிகக் குடும்பத்தைச் சார்ந்தவர், எடுப்புடன் கூடிய சொல்வளமும் எழுச்சியுடன் கூடிய குரல்வளமும் கருத்துடன் கூடிய நடைவளமும் மிக்க சொற்பொழிவாளராய்த் தோன்றித் தொய்வின்றித் தொடர்ந்து தொண்டாற்றி இன்று திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளராக விளங்குகின்றவர்,

தஞ்சை மாவட்டம் சித்திரக்குடி, பகுத்தறிவுப்புலவர் ந. இராமநாதன் கரந்தை காரைக்குடி தமிழ்க் கல்லூரிகளில் முதல்வராகப் பணியாற்றியவர், “பெரியார் பேருரையாளர்” எனும் சிறப்புமிகு பட்டத்துடன் திராவிடர் கழகத்தின் ஆற்றல்மிகு ஆராய்ச்சிப் பேச்சாளராக முன்னணியில் விளங்குகின்றவர்.

“தமிழர் தலைவர்” என்ற ஈடற்ற நூலின் வரலாற்றாசான் தமிழ்ப் பெரும் புலவர் சாமி சிதம்பரனார் 17.11.1961 இரவு 10.30 மணியளவில் தமது 61 ஆவது வயதில் சென்னையில் மறைந்தார். நாரண துரைக்கண்ணன், முகவை ராச மாணிக்கம் போன்றோரும் இடுகாட்டில் இரங்கலுரை பகர்ந்தனர். சனவரி, பிப்ரவரி மாதச் சுற்றுப்பயணங்களில் பெரியாருடன், பொதுச் செயலாளர் ஏ. என் நரசிம்மன். பி.ஏ கலந்து கொண்டார். பெரியார் திருவொற்றியூரில் சொற்பெருக்காற்றுகையில் கண்ணீர்த்துளிகளைக் கண்டித்தார். “பெயரில் மாத்திரம் முன்னேற்றம் என்று இருந்தால் போதுமா? நான் பார்ப்பான் என்றால், நீ பிராமணன் என்கிறாய்? நான் பார்ப்பானே வெளியேறு எனும் போது, நீ அவன் கழுத்தை பிடித்துத் தள்ளினால் முன்னேற்றம்; நான் பூணூல் போடாதே என்று சொல்லும் போது, நீ அவன் பூணூலையே அறுத்தெறிந்தால் முன்னேற்றம்; நான் கிராப் வைத்துக்கொள் எனும் போது, நீ என்னைவிட முன்னே போய் அவன் உச்சக்குடுமியை அறுத்தால் முன்னேற்றம்! இதெல்லாம் செய்யாமல் பெயரில் மட்டும் முன்னேற்றம் சேர்த்துக் கொண்டால் அது வந்து விடுமா?” என்று கேள்விக் கண்களை மாரிபோல் தொடுத்தார் பெரியார்.

குருசாமி மீது திருவையாற்றில் தொடரப்பட்ட வழக்கில் 1.2.61 அன்று தீர்ப்பு 150 ரூபாய் அபராதம் கட்ட மறுத்து, 12 வது முறையாகச் சிறைவாசம், 9 மாத தண்டனை! பெரியாரின் சுற்றுப் பயண நிர்வாகி கோ. இமயவரம்பன், பெரியாரைப் பொதுக்கூட்டங்களுக்கு அழைப்பவர் ரூ.75 தராமல் விட்டுவிடுவதைச் சுட்டிக் காட்டி அறிக்கை ஒன்று தந்தார். திருவாரூரில் 12.2.61 அன்று நடைபெற்ற எஸ்.ஆர்.எம்.யூ. மாநாட்டில் பெரியார், எஸ்.எஸ்.பாட்சா ஆகியோருடன்,