பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

326


விடுதியில் ஓர் அறை தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் உணவு தாமே சமையல் செய்து கொள்வார்கள், ஊர்வலங்கள் தவிர்க்கப்பட வேண்டும். ஊராட்சி மன்றங்களின் வரவேற்புகளை முடிந்தால் பொதுக்கூட்டத்திலேயே தந்து விடலாம். நகரசபையானால் பரவாயில்லை , நேரில் போகலாம். கூட்டங்களில் பெரியாரோடு வருகின்றவர்கள் தவிர, வேறு யாரும் பேசித் தொல்லைகளையுண்டாக்க வேண்டாம். மாலைகளைச் சூட்டி வீணாக்குவதை விடப் பதிலுக்கு எட்டணா கொடுத்து விடலாம். பெட்ரோல் செலவும் ரிப்பேர் செலவும் வேன் சம்பந்தமாக நிறைய ஓடுகிறது . என்றெல்லாம் விவரமாக அனைத்தையும் குறித்திருந்தார் பெரியார்.

ஏப்ரல் 29, 30 மே 1, 2 நாட்களில் பெரியார் பெங்களூர் சென்று வந்தார். 27.4.61 அன்று “விடுதலை” துணைத் தலையங்கப் பகுதியில் சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப் பிள்ளை மறைவு, அண்ணாமலைப் பல்கலைகழகத் துணை வேந்தராக வி. சுப்ரமணியம் நியமனம் ஆகியவை இடம் பெற்றன. காமராசர் தமிழர்களின் ரட்சகர், தியாகி என்று பெரியார் வர்ணித்து வந்தார். சிரிமாவோ பண்டாரநாயகர் ஆட்சியில் தமிழர்கள் தாக்கப்படுவது கண்டனத்துக்கு இலக்காயிற்று, திருச்சியில் நாகம்மையார் அனாதைப் பெண்கள் இல்லம் ஒன்றினை மணியம்மையார் துவக்கினார். 10 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு உணவு கல்வி தங்குமிடம் யாவும் அங்கு இலவசமாய் வழங்கப்பட்டன.

27.4.1961 அன்று குழுமிய தஞ்சை மாவட்ட திராவிடர் கழகம் பெரியாருக்குப் பிரச்சார மோட்டார் அளிக்க முடிவு செய்தது. ஈ.வெ.கி சம்பத் தான் பெரியாரைச் சந்தித்துத் தனது தமிழ் தேசியக் கட்சியில் கொள்கை முதலியவற்றைப் பெரியாரிடம் விளக்கியதாகவும், பெரியார் தன்னைப் பாராட்டியதாகவும் செய்தி வெளியிட்டிருந்தார். ஜூன் மாதம் பிற்பகுதியில் பெரியார் சுற்றுப் பயணத்தில் பொதுச் செயலாளர்களான வீரமணியும் நரசிம்மனும் உடன் சென்றனர், தென்னார்க்காடு மாவட்டத்தில் பெரியார் சுதந்திரக் கட்சியைச் சரியாக எடைப்போட்டு 9.6.61 “விடுதலை” யில் ஒருதலையங்கக் கட்டுரை கட்டினார்:- “சுதந்திராக் கட்சி அரசியல் கட்சியல்ல; இனநலக் கட்சி, காமராசர் ஆட்சியையும், காங்கிரஸ் ஆட்சியையும் கைப்பற்ற வேண்டுமென்றுதான் தமிழ் நாட்டிலுள்ள மற்ற கட்சிகள் சொல்கின்றன. ஆனால் சுதந்திராக்கட்சியோ காமராசர் ஆட்சியையும் காங்கிரஸ் ஆட்சியையும் கவிழ்க்க வேண்டுமென்றே சொல்லுகிறது. இதற்கு அரசியல் காரணம் ஒன்றுமில்லை. நாட்டிற்கு நல்ல ஆட்சி வேண்டும் என்கிற கவலை சுதந்தராக் கட்சிக்கு கிடையாது. சுதந்திராக்கட்சி இனத்துக்கு (பார்ப்பனர்களுக்கு) நாட்டில் எந்தக் குறையும் இல்லை. ராஜாஜியை விட உயர்ந்த பதவியை வகித்தவர் வேறு யாரும் இவர்