பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

327

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


அதற்கு உள்ள ஒரே குறை, படுபாதாளத்தில் கிடந்த மற்ற இனத்தாரும் இன்று மேலே வரும் படியான முயற்சிகளைச் செய்கிறார்களே என்கிற ஆத்திரந்தான். அதனால்தான் ஆச்சாரியார், இது தர்மத்தை நிலை நிறுத்தும் கட்சி என்கிறார். உலகில் தர்மம் வேறு, நியாயம் வேறு அல்லவா?

இன்றையக் காமராசர் ஆட்சிக் காங்கிரசானது சமுதாயத் துறையில் பச்சை நீதியை (bare justice) இலட்சியமாக வைத்து ஆட்சி செலுத்தி வருகிறது. வர்ணாசிரமக் கோட்டையைக் கல்வித்துறையில் தகர்த்து வருகிறது. இந்த முயற்சிக்கு அணுகுண்டு வைத்துத் தகர்த்து நாசமாக்கும் முயற்சிதான் ராஜாஜியின் சுதந்திரக் கட்சியாகும். கள்ள நோட்டு என்பதன் இலட்சியம் மக்களை ஏய்த்துப் பயன் அடைவதாகும். அதற்கும் மேலான தந்திரத்தினால் மக்களை ராஜாஜி ஏய்க்கப் பார்ப்பதால், சுதந்திராக் கட்சிக்கு கள்ள நோட்டுக் கட்சி என்றே வேறு பெயர் வைக்கலாம். இதற்கு முன், பதவிக்கு வந்ததும் ஆச்சாரியார் என்ன செய்தார்? இப்போதும் என்ன செய்வார்?” என்று பெரியார் வெளிச்சம் உண்டாக்கியிருந்தார்.

காரினால் தமக்கு அடிக்கடி சுற்றுப் பயணத்தில் இடையூறு நேரிடுவதாகப் பெரியார் குறிப்பிட்டிருந்தார் அல்லவா? அது நல்ல பயனை அளித்தது. சென்னை நேஷனல் பிக்சர்ஸ் அதிபர் பி.ஏ. பெருமாள் உடனடியாகத் தம்முடைய டாட்ஜ் காரைத் தந்து விட்டார். பலரும் நிதியளித்து வந்தனர். பெரியாரின் வேன் ரிப்பேரான சமயங்களில் ஜி.டி. நாயுடு, பொறையாறு சத்தி விலாஸ் பஸ் அதிபர் பார்த்தசாரதி ஆகியோர் பழுது பார்த்து உதவினர். திருச்சி டி.ஆர். சௌந்தரராசன் தமது நில்லாதே ஓடு என்ற நாடக வாயிலாக வசூலான தொகை ரூ.1322 நன்கொடையாய் வழங்கினார். இப்படி உதவிய எல்லாரையும் பெயர் சொல்லிக் குறிப்பிட்டுப், பெரியார் நன்றி பொங்கப் பொங்க ஒரு கட்டுரையே தீட்டியிருந்தார்.

ஜூலையில் சென்னையில் காமராசரின் 59-வது பிறந்தநாள் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.மராட்டிய முதல்வர் சவான் கலந்து கொண்டார். முதலமைச்சரோ, தஞ்சைப் பகுதியில் பெருத்த வெள்ளச் சேதத்தைப் பார்வையிடப், படகுப் பயணம் செய்து கொண்டிருந்தார். அதேபோன்று, மதுரையில் மூன்றாவது தி.மு.க. மாநில மாநாடு 13, 14, 15, 16 நாட்களில் நடைபெற்றது. தலைமை தாங்கிய அண்ணாவும் இடையில் ஓர் நாள் தஞ்சைப் பகுதி சென்று, படகுகளில் ஏறிப்போய்ப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் வழங்கி வந்தார். பெரியார் அரகண்டநல்லூரில் பேசும் போது, அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் புதிய போராட்டம் துவக்குவதாக அறிவித்தார். கழகத் தோழர்கள் சில நேரங்களில் நாணயக் குறைவாக நடந்து, தமக்கு மாற்றாரை விட இவர்களே அதிகத்