பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

328


தொல்லை தருவதாகக் கூறி வருந்திய பெரியார், திருச்சியை அடுத்து சமயபுரத்தில் 500 ரூபாய் நிதி தருவதாகக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்று, கடைசியில் தராமல் தவறிய செய்தியையும் உதாரணமாக காண்பித்தார். இந்த அறிக்கை வந்த அடுத்து, அதாவது 14.7.61 அன்று, தொலைபேசி வாயிலாகவே, திருச்சி வட்ட திருச்சி நகர திராவிடர் கழகங்கள் கலைக்கப் பட்டதாகச் செய்தி தந்தார் பெரியார்.

29.7.1961 அன்று குஞ்சிதம் குருசாமி அம்மையார் தமது 52-ஆவது வயதில் மறைந்தார். ஆத்தூரிலிருந்த பெரியார் தகனத்துக்குள் சென்னை வந்து விட்டார். இடுகாட்டில் ஈ.வெ.கி. சம்பத், எஸ், ராமநாதன், என்.வி. நடராசன், டி.கே. சண்முகம் ஆகியோரும் இரங்கலுரையாற்றினர். பின்னர் 16.8,61 அன்று நீத்தார் நினைவாகப் படத்திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் காமராசர், டாக்டர் மு.வரதராசனார், ப.ஜீவானந்தம், இந்திராணி பாலசுப்ரமணியம், டி.ஏ.வி. நாதன் ஆகியோர் பங்கு பெற்றனர். கண்ணீர்துளிக் கட்சியைச் சார்ந்த மதுரை முத்து 11.8.61 அன்று கைதானதாக “விடுதலை” செய்தி வெளியிட்டது.

நாகம்மையார் பெண் ஆசிரியப் பயிற்சிப் பள்ளி திருச்சியில் நடத்திட அனுமதி வழங்கப்பட்டது அரசினரால். காமராசர், முதியோர் பென்ஷன் திட்டத்தை விரிவாக்கி இனி 60 வயது ஆனவர்களுக்கும் கிடைக்க (அதுவரை 70 வயது) ஆவன செய்தார். “நான் காங்கிரசில் சேர்ந்து விட்டேனா? என்று சிலர் கேட்கிறார்கள். நான் சேராதிருப்பதே நல்லது!” என்றார் பெரியார். “அரசியல் சுய நலமாகிவிட்டது. வேறு யாரும் இதைச் செய்ய முன் வரமாட்டார்கள். எல்லா ‘இந்தியக் காங்கிரசு’ உள்ள வரையில் நான் காங்கிரசுக்கு எதிர்ப்பாளனாகவே இருக்கிறேன். மற்றும், காங்கிரசின் கள் ஒழிப்பை , கதர் பரப்புதலை, காந்தியத்தை, சாதிமத கோயில் சம்பிரதாயப் பாதுகாப்பை நான் ஒப்புக் கொள்ள முடியுமா? நானே மானங்கெட்டுக் காங்கிரசில் நுழையலாம் என்று துணிந்தாலும், அவர்களும் சேர்க்க மாட்டார்கள்” என்றும் பெரியார் 20.7.61 தலையங்கப் பகுதியிலேயே, “விடுதலை” நாளேட்டில் கட்டுரையாய் எழுதினார்.

வேதாரணியம் காங்கிரஸ் தியாகி சர்தார் வேதரத்தினம் பிள்ளை எம்.எல்.ஏ. தமது 65 ஆவது வயதில் திடீரென்று, 1961 ஆகஸ்டு 25-ஆம் நாள் மறைந்தார். ஈரோடு என். கரிவரதசாமி, நீண்டநாள் குடிஅரசு அலுவலகக் காசாளராயிருந்தவர், 22-ஆம் நாள் மறைந்தார். திருவாரூர் சிங்கராயர் செப்டம்பர் 23-ஆம் நாளும், திருச்சி ஃபிரான்சிஸ் அக்டோபர் 12-ஆம் நாளும் மறைந்தனர். 35 ஆண்டுகள் “குடிஅரசு”, “விடுதலை” அலுவலகங்களில் வாச்மேனாக இருந்த பழனி (கவுண்டர்) ஆகஸ்டு 29-ஆம் நாள் மறைந்த செய்தி “விடுதலை”யில் முக்கிய இடம் பெற்றிருந்தது. சம்பத்தும் கண்ணதாசனும், சாதி ஒழிப்பு மாநாடு