பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

329

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


நடத்த இருக்கிறோம், கலந்து கொள்வீர்களா? என்று கேட்டார்களாம்; நாம் தமிழர் கட்சி நடத்திய மாநாட்டுக்கே போனவன், உங்கள் கட்சிக்கு வர மாட்டேனா? வருகிறேன் என்றாராம் பெரியார். நாம் தமிழர் கட்சி. தேர்தலில் நிற்பதாக அப்போது முடிவெடுத்து விட்டது. தொலைபேசி மூலமாகப் பெறப்பட்ட இச்செய்தி 29.8.61 “விடுதலை”யில் காணக் கிடக்கின்றது.

பட்டுக்கோட்டை அழகிரி குடும்பத் திருமணங்களில் பெரியார் 6.9.61 அன்று தலைமை தாங்கி நடத்தித் தந்தார். அழகிரி மகன் துலீப், அழகிரி மகள் ராணி ஆகியோர் மணவினை நிகழ்ந்தது. திருச்செங்கோடு கே.பரமசிவம் நடத்தும் பெரியார் 83-வது பிறந்ததாள் விழா இந்த ஆண்டு 17.9.61 சென்னை ஆபட்ஸ்பரி மன்றத்தில் நடந்தது. செட்டிநாட்டரசர், சர் ஏ.ராமசாமி, ஆசைத் தம்பி, தமிழ்வாணன், சவுந்தரா கைலாசம், அகல்யா சந்தானம், குழந்தைவேலு (ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி) ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகவேள் ராதா 8300 ரூபாய் நன்கொடை வழங்கினார் பெரியாரிடம். தமிழ் தேசியக் கட்சியினர் சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் 15, 16 நாட்களில் சாதி ஒழிப்பு மாநாடு நடத்தினர். பெரியாருடன் குன்றக்குடி அடிகளார், தேவநேயப் பாவாணர் ஆகியோர் கலந்து கொண்டனர். 21-ம் நாள் பெரம்பலூர் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ மாநாட்டுக்குப் பெரியார் தலைமை தாங்கினார். தஞ்சையில் திராவிடர் கழகத்துக்குக் கட்டடம் சொந்தமாகக் கட்டப்பட்டு, அதைப் பெரியார் 20.9.61 அன்று திறந்து வைத்தார். திருச்சியில் டாக்டர் மதுரம் தலைமையில் பெரியார் பிறந்த நாள் விழாவில் ரூ.6569 நிதியும் மணிமகுடமும் வழங்கப் பெற்றன. 11.10.61 “விடுதலை”யில் மிகச் சிறிய அளவில் ஒரு செய்தி காணப்படுகிறது: “எஸ், குருசாமி ராஜினாமா வந்து சேர்ந்தது; ஈ.வெ. ரா.” - என்று மட்டும் உள்ளது.

சிதம்பரத்தில் 8.10.61 அன்று கோலாகலமான கொண்டாட்ட விழாவில் நடமாடும் இல்லம் என வர்ணிக்கத்தக்க MSW 7007 வேன் பெரியாருக்கு வழங்கப்பட்டது. பி.ஏ. பெருமாள் தலைமையில் எஸ்.ஆர்.வி.எஸ். மானேஜிங் டைரக்டர் குடந்தை ஆரோக்கியசாமி, கார் சாவி வழங்கினார். சம்பத், கண்ணதாசன் ஆகியோரும் கலந்து கொண்டனர். சிம்சன் கம்பெனி அனந்தராமகிருஷ்ணன் மேற்பார்வையில் வேன் தயாரானது. “காமராசர் ஆட்சி சாதி ஒழிப்புக்குச் சாதகமாயிருக்கிறது. அதனால் இன்னும் ஓர் ஐந்தாண்டு காலத்துக்குக் காமராசருக்கே வாக்களியுங்கள்!”என்று கேட்டார் பெரியார்.

பெரியார் தேர்தல் பிரச்சார இயந்திரத்தை முடுக்கி விட்டார்! சென்னை மாநகரில் ஏராளமான பொதுக்கூட்டங்கள்! “கண்ணீர்க் துளிகள் சட்டசபையில் சாதித்தது என்ன?” என்று வீரமணி தொடர் கட்டுரை தீட்டி வந்தார். “தமிழ் நாடா? திராவிட நாடா?” என்ற