பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

330


விளக்கநூலும், வீரமணி எழுத, குடிஅரசுப் பதிப்பகச் சார்பில் வெளியிடப்பட்டது. 17.11.61 அன்று, தேர்தலில் திராவிடர் கழகத்தின் நிலையை விளக்கிப் பெரியார் கட்டுரை வரைந்தார்.

“கொஞ்ச நாட்களுக்கு முன்பு, திராவிடர் கழக ஆதரவாளர்களும், திராவிடர் கழகச் சார்புள்ளவர்களும், தங்களுக்கு அவசியம் என்றோ, சரி என்றோ பட்டால், அவர்கள் காங்கிரசில் சேர்ந்து கொள்ளுவதில் நமக்கு ஆட்சேபனையில்லை, என்று எழுதியிருந்தேன். கழகத்தார்கள் சேர்ந்து கொள்ளலாம் என்று நான் கருதியிருந்தால் தெளிவாக, விளக்கமாக, சந்தேகத்திற்கு இடமில்லாமல் கழகத்தார் இஷ்டப்பட்டவர் சேர்ந்து கொள்ளலாம் என்று எழுதியிருப்பேன்.

வரப்போகும் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மக்களுக்கு விளக்கம் சொல்லப் போதிய ஆட்கள் இல்லை. கழகத் தோழர்கள், கழகச்சார்பிலேயே நல்லபடி விளக்கம் கூறலாம். நிற்க, தேர்தலில் கழகத்தின் நிலைமை என்னவென்றால் கண்ணைமூடிக் கொண்டு காங்கிரசை ஆதரிப்பது தான்!

யார் யாரை நிறுத்துவது என்ற பொறுப்பு 100க்கு 100 காங்கிரசையே சேர்ந்ததாகும். ஆகவே காங்கிரஸ்காரர்கள் ‘களிமண்ணையோ’, ‘மரக்கட்டையையோ’ நிறுத்தினாலும் நாம் நமக்காகவே வேலை செய்வதுபோல் பாடுபட வேண்டும்.

ஆகவேதான், காமராசரையே நம்பி எல்லாப் பொறுப்புகளையும் அவர் மீதே போட்டு அவரால் நிறுத்தப்படுகிற ஆட்களில் 100க்குத் 90 பேருக்குக் குறையாமலாவது வெற்றி பெறும்படிச் செய்ய வேண்டியது நம்முடைய கடமை என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்." என்பதுதான் கட்டுரையின் முக்கிய கருத்தாகும்.

1962-ஆம் ஆண்டு, பெரியாரின் கடற்கரைச் சொற்பொழிவோடு துவங்கிற்று. இனநலம் என்ற கண்ணோட்டத்துடன்தான் பெரியார் காமராசரை ஆதரித்து வந்தார். அவரை நேரில் சந்திப்பதே கிடையாது. 23.7.57 அன்று டாக்டர் வரதராசலு நாயுடு மறைவின்போது பார்த்தது. அவரையே ஆதரிப்பதற்குக் காரணம் அவரது ஆட்சியைக் குறை சொல்கிற கண்ணீர்த் துளிகளுக்குக் கொள்கையும் கிடையாது; திறமையும் இல்லை என்றார் பெரியார். தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி. திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க் கட்சியார் வருவதற்குக் கூட இலாயக்கில்லை என்று தமது கூட்டத்தில் பேசி வந்தார்.1.1.1962 “விடுதலை”யில் பெரியார் “பார்ப்பனத் தோழர்களுக்கு” என்று எழுதிய மிக உருக்கமான கட்டுரை, விருப்பு வெறுப்பின்றிப் படித்து, ஆழ்ந்து சிந்திக்கத்தக்கதாக அமைந்தது.