பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

331

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


"பார்ப்பனத் தோழர்களே! நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லன். சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வும், அவர்கள் அனுபவிக்கிற, அளவுக்கு மேற்பட்ட விகிதமும்-ஆகியவைகளில் தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. நான் நமது நாட்டையும் சமுதாயக்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும் நாகரிகத்துக்கும் கொண்டு வர வேண்டும் என்கிற ஆசையுடையவன். பார்ப்பன சமுதாயம் இதற்கு முட்டுக கட்டையாக இருக்கிறது என்று, சரியாகவோ தப்பாகவோ நான் கருதுகிறேன். தாங்கள் அப்படி இல்லை என்பதைப் பார்ப்பனர்கள் காட்டிக் கொள்ள வேண்டாமா? உண்மையிலேயே எனக்கு மாத்திரம் பார்ப்பனர்களுடைய ஆதரவு இருந்திருக்குமானால், நமது நாட்டை எவ்வளவோ முன்னுக்குக் கொண்டுவர என்னால் முடிந்திருக்கும்.

பார்ப்பன சமுதாயம் இன்றைக்குத் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். இராஜாஜியின் கட்சிக்கு, அல்லது, அவர் கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிற கட்சிக்கு வோட்டுப் போட்டாலும், காங்கிரசுக்கே போட்டாலும், இரண்டு மல்லாத வேறு கட்சிக்குப் போட்டாலும் இந்தத் தேர்தலில் பார்ப்பனர்கள் பொது மக்கள் நம்பிக்கையைப் பெறமுடியாது. பொது மக்கள் சந்தேகமும் மாறாது. அதனால் பார்ப்பனர்கள் இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும், யாருக்கும் வோட்டுப் போடாமல், விலகி இருப்பதே புத்திசாலித்தனமான வழியாகும்.

தேர்தலுக்குப் பிறகு அரசியல் திட்டம் எதுவாக இருந்தாலும், சமுதாயத் திட்டம் என்பது பார்ப்பனர் வெறுப்புத் திட்டமாகத்தான் இருக்கும். இனி, கண்ணீர்த் துளிக் கட்சி தேர்தலுக்குப் பிறகு இந்த நாட்டில் உலவ வேண்டுமானால், பார்ப்பன வெறுப்புச் சாதனத்தைத்தான் கைத்தடியாகப் பிடித்துக் கொள்ள வேண்டியவர்கள் ஆவார்கள். இந்தக் காரியத்துக்கு என்னை அணுகலாம். நானும் ஆதரவளிக்கலாம். எனக்கு சமுதாயத்துறையில் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரும் எதிரிகளல்லர்.

பார்ப்பனர்கள் நான் ஏதோ மிரட்டுகிறேன் என்பதாக கருதிவிடக் கூடாது. இதற்கேற்ற மாதிரிப் பார்ப்பனத் தலைவர்கள் அறிக்கை விடுவது நலம் என்று கருதுகிறேன்."அறிக்கையில் பெரியார் நுணுக்கமான பல நிலைமைகளை நன்கு ஆராய்ந்து கூறியிருந்தார். ஆனால், எதிர்பார்த்தது போலவே ராஜாஜி, ஈ.வெ.ரா. மிரட்டுகிறார் என்ற பொருள்பட அந்த வாரக் ‘கல்கி’ இதழில் எழுதியிருந்தார். ஓட்டுச் சாவடியில் வன்முறை கையாள்வார்கள் போலும் என்றெல்லாம் திசை திருப்பிவிட்டார் ஆச்சாரியார்.

பெரியாருக்குக் காலில் சுளுக்கு ஏற்பட்டதால் நாற்காலியில் அமர்ந்தபடியே, 1962 சனவரி 6, 7 நாட்களில் பெரியார் திடலில்