பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

332


நடைபெறவிருந்த இரு மாநாட்டு முன்னேற்பாடுகளையும் நேரில் கவனித்து வந்தார். 6-ந் தேதி காலை சென்னை தியாகராய நகரிலுள்ள பார்க்கிட் சாலையில் வியூகம் வகுத்து மாபெரும் கருஞ்சட்டையினர் ஊர்வலம் புறப்பட்டது. லட்சம் பேருக்கு மேல் மக்கள் குழுமினர். தலைவர் பெரியார் அலங்கார ஊர்தியில் அமர்ந்து வந்தார். 250க்கும் மேற்பட்ட பஸ்களும் டிரக்குகளும் அணிவகுத்து வர, 13 மைல் நீளத்தையும் கடந்து வந்தது அந்தப் பேரணி. ஊர்வலமே அன்றைய பொழுதில் பெருமளவை எடுத்துக் கொள்ளுமோ என அஞ்சிச் சிறிது குறுக்கு வழியில் வர நேரிட்டது. அதனால் தி. க. மாநாட்டில் முழுமையாகப் பெரியார் மட்டுமே பேச நேர்ந்தது. குருசாமி வேதாசலனார், நரசிம்மன் சிறிது பேசினர். இரவு எம்.ஆர். ராதாவில் லட்சுமிகாந்தன் நாடகம் சிறப்பாக நடைபெற்றது. மறுநாள் வோட்டர்கள் மாநாடு புதுமையாக, முதன்முறையாக நடந்தது. ஈ.வெ.கி. சம்பத் வரவேற்க, ஆதித்தனார் திறந்து வைக்க, குன்றக்குடி அடிகளார் தலைமை ஏற்றார். அப்துல் மஜீத், கண்ணதாசன், டாக்டர் விஜயலட்சுமி, பெரியார் உரையாற்றினர். இரவு சிவாஜி கணேசன் குழுவினரின் நாகநந்தி நாடகம் நடைபெற்றது. பெரியார் தலைமை ஏற்று, சிவாஜி தலைசிறந்த நடிகராகவும் வள்ளலாகவும் விளங்குகிறார் எனப் பாராட்டினார். பெரியாரின் மூடநம்பிக்கை ஒழிப்புக் கொள்கைகளைத் தாமும் இனிப் பின்பற்றுவதாக, சிவாஜி கணேசன் நன்றி தெரிவிக்கையில் கூறினார். “நம்மை எதிரிகளாக மதித்து வந்த நேரு, நமது பட எரிப்புப் போராட்டத்துக்குப் பின்னர், சாதி அமைப்புகள் ஒழிய வேண்டுமென்று கூறத் தொடங்கியுள்ளார். காமராசர் ஆட்சியும் நமது சாதி ஒழிப்பிற்கு அனுகூலமாயிருக்கிறது, அதனால் அடுத்த தேர்தலில், சமத்துவ சமுதாய அமைப்புக்கு ஆக்கமளித்திடக், காமராசர் கட்சிக்கே வோட் செய்ய வேண்டும்” என்று பெரியார், மாநாட்டில் வேண்டிக் கொண்டார். பொங்கலன்று திருச்சியில், தேர்தலும் மக்கள் கடமையும் என்ற தலைப்பில் பெரியார் சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து வீரமணியும் உடன்வர, நேரடியான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 22-ந் தேதி லால்குடி தொகுதியிலும், 23-ந் தேதி சீரங்கம் தொகுதியிலும் ஒரு நாளைக்கு 13, 14 கூட்டங்களில் பேசிட, மின்னல் வேகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் பெரியார்.

திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் டி.டி. கிருஷ்ணமாச்சாரி, தம்மை எதிர்த்து நின்ற ஒரே சுதந்திர வேட்பாளர் வாபஸ் வாங்கியதால் போட்டியின்றி வெற்றி பெற்றார். தமிழ் தேசியக் கட்சி 15 இடங்களைத் தேர்ந்தெடுத்துச் சிறிய அளவில் தேர்தல் பணிகளை நடத்தியது. தலைவரான சம்பத் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.