பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

333

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


இந்தி எதிர்ப்புப் போரில் சிறை சென்ற வீரராய், ஆங்கிலம் தமிழ் இருமொழி வல்லவராய், ஒரே நேரத்தில் திராவிடன், ஜஸ்டிஸ் இரண்டிலும் தலையங்கம் எழுதிய திறமைமிக்கவராய், இறுதி நாட்களில் அகராதித் தொகுப்பில் ஈடுபட்டவராய் விளங்கிய டி.ஏ.வி. நாதன் 20.1.1962 அதிகாலை தமது 58வது வயதில் இயற்கை எய்தினார். பெரியார் பெரிதும் துயரமுற்றார்.

தஞ்சையில் தென்பகுதி ரயில்வேத் தொழிலாளர் சங்க மாநாடு 28.1.62 அன்று, மத்திய அரசு ஊழியர்கட்குக் கல்விச் சலுகை வழங்கப்பட்டதைப் பாராட்ட நடைபெற்ற போது, பெரியாரும் கலந்து கொண்டார். கழகத் தோழர்கள் தேர்தல் கூட்டங்களில் பேசும்போது கண்ணியத்தைக் காக்க வேண்டும். தனிப்பட்ட யாரையும் தாக்கிப் பேசக் கூடாது என 30.1.62 அன்றைய “விடுதலை”யில் பெரியாரின் அறிக்கை வெளியாயிற்று. காமராசர், சுதந்திரக் கட்சியினரின் சாதி வெறிப் போக்கை கண்டித்து, மாடு மேய்ப்பவன் மகன் மாடு மேய்க்க வேண்டியதுதான் என்கிறார்கள்; நாங்கள் அவன் படிக்க வேண்டும் என்று சொல்லி வசதி செய்து தருகிறோம், என்று சிதம்பரத்தில், 30.1.62-ல் பேசினார். பிப்ரவரி மாதம் நன்றாகத் தேர்தல் சூடு பிடித்துவிட்டது. மத்திய அரசு தென்னகத்திற்குப் பல சலுகைகளை வழங்கி வந்தது. தாம்பரம் வண்டலூர் மின் ரயில் தொடங்கப்பட்டது. விருதுநகர்-அருப்புக்கோட்டை மானாமதுரை ரயில் பாதை அமைப்பு தொடங்கியது. இது போன்ற பெரிய பெரிய விழாக்கள் காமராசர் தலைமையில் நடந்தன. நேரு சென்னைக்கு வந்து, காமராசர் மாபெரும் சக்தியாக இன்று நாட்டோர்க்குக் கிடைத்துள்ளார் என்றார். 6.2.1962 அன்று .

“விடுதலை” நாளிதழில் காமராசர் ஆட்சியின் சாதனைகள் - இந்தப் பத்தாண்டுகளில் என்று தினந்தோறும் பட்டியலிட்டுக் காண்பிக்கும் பெட்டிச் செய்திகள் வந்து கொண்டிருந்தன. கண்ணீர்த் துளிக் கட்சியினரின் பித்தலாட்டம்; பொறுக்கித் தின்னுவது, தவிர எதிர்க் கட்சிகள் போய் வேறென்ன சாதிக்க முடியும்? மூலவருக்குக் காஞ்சியில் தோல்வி முகம் - நிருபர் சேகரித்த சிறப்புத் தகவல் - என்றெல்லாம் அப்பட்டமான பிரச்சார வன்மை படைத்த செய்திகள் முதலிடம் பெற்றன. நேரு பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்கிறார். பெரியார் பிரச்சாரம் இமயத்திலும் எதிரொலிக்கிறது. நல்லோர்களையே தேர்ந்தெடுத்து அனுப்புங்கள் - பெரியார் எச்சரிக்கை - நூற்றுக்கு நூறு வாக்குப் பதிவு அவசியம் - வாக்களிக்கத் தவறாதீர்கள், (1962 தேர்தலில் 70.7% வாக்குப் பதிவு செய்து இந்தியாவில் தமிழகமே முன்னணியில் நின்றது) முஸ்லீம் பெருமக்களுக்குச் சமநீதியும் நல்ல உயர் பதவிகளும் வழங்கி வருபவர் காமராசரே ஆவார். If the electors are fools the legislators will be rescals என்று பெர்னாட்ஷா கூறியதை